குடும்பச் சண்டையில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!
மாத்தளை, மஹவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்வத்த, செலகம பிரதேசத்தில் இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் எனப் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
சாந்தபுரம், பொல்வத்த பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயது இளைஞரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மாத்தளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய 34 வயது நபரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இதன்போது கொலைக்குப் பயன்படுத்திய வாள் மற்றும் உள்நாட்டுத் துப்பாக்கி என்பவற்றை சந்தேகநபரிடமிருந்து பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குடும்பச் சண்டையே இந்தப் படுகொலைக்குக் காரணம் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதலின்போது சந்தேகநபரும் காயமடைந்துள்ள நிலையில், பொலிஸ் பாதுகாப்பில் மாத்தளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இச் சம்பவம் தொடர்பில், மஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.