கனேடிய நகரமொன்றில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலைமை
கனடாவின்(Canada) ஆல்பர்ட்டா மாகாணத்தின் கல்கரி நகரில் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த நகரத்தின் மேயர் ஜியொடி கொன்டக்ட் இந்த அவசரகால நிலைமையை பிரகடனம் செய்துள்ளார்.
நகரில் நிலவிவரும் நீர் தட்டுப்பாடு காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நெருக்கடி நிலைமை
அண்மையில் நிலக்கீழ் நீர் விநியோக கட்டமைப்பின் ஓர் பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதனால் நீர்விநியோகம் பாதிக்கப்பட்டது.இந்த நீர் கசிவினை அடையாளம் கண்டு பழுது பார்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
நகர மக்களுக்கு போதிய அளவு நீரை விநியோகம் செய்வதில் நகர நிர்வாகம் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றது.இந்த நெருக்கடி நிலைமை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
நீர்த்தட்டுப்பாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு அல்பர்ட்டா மாகாண அரசாங்கம் வழங்கிவரும் உதவிகளுக்கு நன்றி பாராட்டுவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே நிலவிவரும் நீர் தட்டுப்பாடு காரணமாக நகர மக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிலர் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளதுடன் பல்வேறு தரப்பினர் இந்த அவசரகால நிலைமை அறிவிப்பினை விமர்சனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |