தனக்கு எதிராக தானே உரையாற்றிய ரணில்! 45 வருட நாடாளுமன்ற அனுபவம் குறித்து பகிரங்க கேள்வி
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் ஆற்றிய உரை அவருக்கு எதிராக அவரே ஆற்றிய உரை என்று மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இன்றைய உரையானது இதற்கு முன்னர் இந்த நாட்டின் அனைத்து ஜனாதிபதிகளும் முன்வைத்த உரையே ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் 22 வருடங்களாக நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகித்து வருகிறேன். பல உரைகளை கேட்டுள்ளேன். அதில் ஜனாதிபதிகளின் அக்கிராசன உரைகளும் அடங்கும்.
ரணிலுக்கு எதிராக ரணில் ஆற்றிய உரை
அனைத்து அக்கிராசன உரைகளிலும் குறிப்பிடப்படும் ஜனநாயகம், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், இளைஞர்களின் எதிர்காலம், ஊழலை இல்லாதொழித்தல் போன்ற அனைத்து விடயங்களும் இன்றைய ஜனாதிபதி ரணிலின் உரையிலும் இருந்தது.
இவை பற்றி எத்தனை தடவைகள் பேசியிருக்கிறார்கள் ? ஜனநாயகம் பற்றி பேசுகிறார்கள். ஆனால் நாட்டில் ஜனநாயகம் இல்லாதொழிக்கப்படுகிறது. பொருளாதாரம் அதள பாதாளத்துக்குள் தள்ளப்படுகிறது.
இளைஞர்களின் எதிர்காலம் அரசியல் பற்றி பேசுகிறார்கள் ஆனால் 60 ,70 வயது கடந்தவர்கள் தான் நாடாளுமன்றத்தில் உள்ளனர்.
இதிலெல்லாம் 45 வருடங்கள் இந்த நாடாளுமன்றத்தில் வகிக்கும் ரணிலுக்கு பொறுப்புக்கூறல் உண்டு. ஏறத்தாழ 43 வருடங்கள் பிரதமராக, எதிர்க்கட்சி தலைவராக, அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். ஆக இது ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக ரணில் விக்ரமசிங்க ஆற்றிய உரையாகும் என தெரிவித்துள்ளார்.