இலங்கை தொடர்பான தீர்மானம் விரைவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்படும் சாத்தியம்
இலங்கை தொடர்பான தீர்மானம் அடுத்த செவ்வாயன்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் முன்னெடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐக்கிய இராச்சியம் தலைமையிலான நாடுகளின் முக்கிய குழுவினரால் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரியவரும் பேதும் இலங்கை இதனை ஏற்கனவே நிராகரித்துள்ளது.
முன்னதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கை தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது.
இதன்போது பேரவையில் வாக்களிக்கும் உரிமை கொண்ட பத்து நாடுகள் உட்பட 21 நாடுகள், ஆணையாளரின் அறிக்கைக்கு எதிராக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தின.
எனினும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட 15 நாடுகள் தீர்மானத்தை முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தின.
இந்த தீர்மானத்தின்படி போர்க்குற்றங்கள் தொடர்பில் உடனடி, முழுமையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணை உறுதி செய்ய வேண்டும்.
அத்துடன் உத்தரவாதம் அளிக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகள் தொடர்பில் வழக்குத் தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.