சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பிறகு குழந்தை உயிரிழந்த சம்பவம்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
கொழும்பு பொரளை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உயிரிழந்த குழந்தை ஒன்று தொடர்பில் புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
குழந்தையின் பிரேதப் பரிசோதனையில் இரண்டு சிறுநீரகங்களும் அகற்றப்பட்டிருந்ததாகத் தெரியவந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும், அகற்றப்பட்ட சிறுநீரகங்கள் இதுவரை வைத்தியசாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
உரிய நடவடிக்கை எடுக்கவில்லை
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என மருத்துவ நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் சமல் சஞ்சீவ குற்றஞ்சாட்டியுள்ளார்.
குழந்தையின் இரண்டு சிறுநீரகங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்திருந்ததால் இரண்டுமே அகற்றப்பட்டதாக அப்போதைய வைத்தியசாலை பணிப்பாளர் விளக்கமளித்திருந்தார்.

எனினும், அறுவை சிகிச்சைக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் சிறுநீரகங்கள் தனித்தனியாக இருந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகள்
இந்தச் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்திலும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சம்பவத்திற்கு நீதி கோரி இன்று சுகாதார அமைச்சுக்கு முன்பாக போராட்டமொன்றும் நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பில் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை பணிப்பாளரிடம் இருந்து இன்னும் கருத்துக்கள் வெளியாகவில்லை.