பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த இளைஞர்! மரணத்திற்கான காரணம் வெளியானது..
மாத்தளை பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்தமைக்கு அதிகளவிலான போதைப்பொருள் பாவனையே காரணம் எனப் பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மற்றுமொரு முக்கிய விடயமாக, பிரேதப் பரிசோதனையின்போது உயிரிழந்த நபரின் சடலத்திற்கு அருகில் 'ஐஸ்' போதைப்பொருள் அடங்கிய பொதியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்தின் பேரில் கைது
இவ்வாறு உயிரிழந்தவர் கண்டி, அம்பிட்டிய, திலனகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபராவார்.

'ஐஸ்' போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அவர், மாத்தளை பொலிஸ் நிலையத்தின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 20ஆம் திகதி அதிகாலை பொலிஸ் காவலில் இருந்தபோது திடீரென நோய்வாய்ப்பட்ட அவரை சிகிச்சைக்காக மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 12.45 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.