புதிய கூட்டணிக்கு திட்டமிடும் விமல் தரப்பு: பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும் அழைப்பு
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa ), நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க(Roshan Ranasinghe) மற்றும் தொழில் அதிபர் திலித் ஜயவீர ஆகியோர் புதிய அரசியல் கூட்டணியை ஆரம்பிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த கூட்டணியில் உத்தர லங்காவை பிரதிநிதித்துவப்படுத்தும் சில பிரதிநிதிகளும் இணைய உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தல்
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோரை பங்குபற்ற வைப்பது தொடர்பிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து சுயேட்சையாக செயற்படும் எம்.பி.க்கள் குழுவையும் இந்தக் கூட்டணியில் இணைத்துக் கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.
உத்தர லங்கா கூட்டணியில் அங்கம் வகிக்கும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, விஜயதரணி தேசிய பேரவை, பிவித்துரு ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளரை நியமிப்பது தொடர்பில் கூட்டணி இன்னும் முடிவெடுக்கவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
விரிவுபடுத்தும் வேலைத்திட்டம்
தேசிய மட்டத்தில் அரசியல் முகாமை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தேவையான அரசியல் சூழலை நாட்டில் ஏற்படுத்துவதற்காகவே இந்த புதிய கூட்டணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் இந்தக் கூட்டணியை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |