இலங்கை சுங்கத்திணைக்களத்தின் நிதி மோசடி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இலங்கை சுங்க அதிகாரிகள் 1988ஆம் ஆண்டு முதல் பில்லியன் கணக்கான ரூபாய்களை தங்களுக்குள் வெகுமதி பணமாக பகிரப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது நிதி அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தை புறக்கணித்து திணைக்களத்தால் தயாரிக்கப்பட்ட உள்ளக சுற்றறிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கணக்காய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.
அபராதம்
கணக்காய்வுக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், கடந்த 2012ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 முதல் சுங்க அதிகாரிகளுக்கு 22.22 பில்லியன் ரூபாய்கள் வெகுமதிகளாக செலுத்தப்பட்டுள்ளன.
சுங்க கட்டளைச் சட்டத்தின்படி நிதி அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்ட திட்டத்தின் அடிப்படையில் மாத்திரமே வெகுமதி பணம் அதிகாரிகள் மற்றும் தகவலறிந்தவர்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டும்,
ஆனால் அமைச்சரின் ஒப்புதல் இல்லாமல் உள்ளக உத்தரவுகளின்படி இந்த வெகுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
சுங்க கட்டளையைப் பொறுத்தவரை இறக்குமதிகளின்போது குற்றம் கண்டறியப்பட்டவுடன் அபராதம் விதிக்கப்படுகிறது.
கணக்கில் வரவு வைப்பு
இந்தநிலையில் அபராதத்திலிருந்து மீதமுள்ள நிகர வருவாயில் 50 சதவீதம் மட்டுமே திறைசேரியின் துணை செயலாளர் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
எனினும் செலவுகளை கழித்து பார்க்கின்றபோது, 30 வீதமான தொகையே திறைசேரியின் கணக்கில் வரவு வைக்கப்படுவதாக கணக்காய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை தமது வருகையை பதிவுசெய்ய கைரேகை இயந்திர அமைப்பு இல்லாத நிலையில் சுங்க அதிகாரிகள் அதிக அளவு கூடுதல் நேர கொடுப்பனவுகளை சம்பாதிக்கிறார்கள் என்று கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கூடுதல் நேர கொடுப்பனவுகளின் துல்லியத்தை சரிபார்க்க முடியாது என்ற அடிப்படையில், பொது நிர்வாகத்தின் படி கணினி கட்டமைப்பை அறிமுகப்படுத்துமாறு கணக்காய்வாளர் நாயகம் பரிந்துரை செய்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |