தமிழர் பகுதியில் பலரையும் திரும்பி பார்க்க வைக்கும் நிறுவனம்
போரில் கணவரை இழந்த பெற்றோரை இழந்த அல்லது ஊனமுற்ற பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் மன்னாரில் தப்ரேபேன் கடல் உணவு நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெண்களின் சுய அபிவிருத்தியையும், சமூக மேம்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது.
பெண் முயற்சியான்மையாளர்கள்
பெண்கள் என்றாலே மென்மையானவர்கள் என்ற ஒர் அடிப்படை கருதுகோளை உடைத்து எறிந்து இன்று பெண்கள் ஆண்களுக்கு சரிநிகர் என்பதனை விடவும் ஆண்களை விடவும் அனைத்து துறைகளிலும் தங்களை தடம் பதித்து வரலாறு படைத்து வருகின்றனர்.
இவ்வாறு பெண்களின் அசாத்திய முயற்சிகளுக்கு அவர்களின் திறமைகளுக்கு தீனி போடும் அமைப்புக்கள், நிறுவனங்கள் மிகவும் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே காணப்படுகின்றன.
மேற்கத்தைய நாடுகளை போல் அன்றி கீழைத்தேய நாடுகளில் குறிப்பாக இலங்கை போன்ற நாடுகளில் பெண் முயற்சியான்மையாளர்களின் திறமைகள் போற்றப்படுவதில்லை அல்லது அவர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை.
இவ்வாறான ஓர் பின்னணியில் இலங்கையின் வடமாகணத்தில் மன்னாரில் அமைந்துள்ள தப்ரேபேன் சீ புட் கடல் உணவு நிறுவனமானது முழுக்க முழுக்க பெண்களை ஆளணி வளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ஓர் நிறுவனம் என்பது ஆச்சரியமான உண்மையாகும்.
நூறு வீதம் பெண்கள்
இந்த கடல் உணவு உற்பத்தி நிறுவனமானது நூறு வீதம் பெண்களை கொண்டமைந்த நிறுவனமாக காணப்படுகிறது.
உள்நாட்டு சந்தையில் தங்களது உற்பத்திகளை விற்றுக் கொள்வதிலேயே பல்வேறு சவால்களை எதிர்நோக்கும் நிலையில் சர்வதேச தரத்தில் சர்வதேச உற்பத்திகளுடன் போட்டி போடும் அளவிற்கு இந்த நிறுவனத்தின் உற்பத்தி வளர்ச்சி அடைந்துள்ளது.
முழுக்க முழுக்க ஏற்றுமதி நோக்கத்தை கொண்டு இந்த கடல் உணவு உற்பத்தி நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிறுவனத்தில் கடைநிலை பணியாளர் முதல் உயர் பதவிகளை வகிப்பவர்கள் வரையில் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முகாமையாளர்கள் மேற்பார்வையாளர்கள் மட்டுமன்றி பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்த இந்த மாதத்தில் இவ்வாறான ஒரு நிறுவனம் பற்றிய தகவல்களை பரிமாறிக் கொள்வது பெருமிதமாக காணப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |