வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிக்கிய சிறுத்தை
மஸ்கெலியா - லக்கம் பெருந்தோட்டப் பகுதியில், வனவிலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த பொறியில் சிறுத்தை ஒன்று சிக்கியுள்ளது.
குறித்த சிறுத்தையானது நேற்றிரவு(31.08.2024) பொறியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புகளை அண்மித்த பகுதியொன்றிலேயே இந்த சிறுத்தை சிக்கியுள்ளது.
மீட்பு நடவடிக்கை
இதையடுத்து, நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள், கால்நடை வைத்தியரின் உதவியுடன் சிறுத்தையை மீட்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
எனினும், தப்பிக்க முயன்ற சிறுத்தை பின்னர் உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த சிறுத்தையின் சடலத்தை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும், பின்னர் நீதவானின் உத்தரவின் பேரில் சடலம் பிரேத பரிசோதனைக்காக ரந்தெனிகல வனவிலங்கு கால்நடை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வனவிலங்குகளுக்காக பொறி வைத்த சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மஸ்கெலியா பொலிஸார் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் இவ்வாறு சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றமையினால் மலையக மக்கள் மிகுந்த அச்சத்தின் மத்திலேயே தமது வாழ்கையை நடாத்தி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல்கள் - திருமாள், திவாகரன்