காரைநகரில் வீட்டின் மீது பனை முறிந்து விழுந்து சிறுமி காயம்
யாழ்ப்பாணம், காரைநகர்ப் பகுதியில் வீடு ஒன்றின் மீது பனை மரம் முறிந்து விழுந்ததில் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அத்துடன் வீட்டின் கூரையும் சேதமடைந்துள்ளது.
வட பகுதியில் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவி வரும் நிலையில் காரைநகர் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட ஜே/48 கிராம சேவகர் பிரிவில் வீசிய கடும் காற்றின்போதே இன்று மாலை பனை மரம் முறிந்து வீட்டுக்கு மேல் விழுந்துள்ளது.
வீட்டிலிருந்த இரண்டரை வயதுச் சிறுமி படுகாயமடைந்து சங்கானை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
வீட்டில் மூவர் வசித்து வரும் நிலையில் இருவர் வீட்டுக்கு வெளியில் நின்றதன் காரணமாக உயிர் ஆபத்துக்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. வீடு பலத்த சேதமடைந்துள்ளது.
காரைநகர் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் வீட்டுக்கு மேல்
விழுந்த பனையை அப்புறப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.