போதைப்பொருள் வேட்டையில் 948 பேர் கைது!
முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று நாடு தழுவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனை நடவடிக்கைகளில் 948 சந்தேகநபர்கள் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தத் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று(27.5.2026) ஒரே நாளில் மட்டும் நாடு முழுவதும் 947 விசேட தேடுதல் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்களில் கடுமையான போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகப் பொலிஸாரால் நீதிமன்ற விசேட தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கைது
அத்துடன், போதைப்பொருள் பாவனைக்குக் கடுமையாக அடிமையாகியுள்ள நால்வர், நீதிமன்ற அனுமதியுடன் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வைத்திருந்த போதைப்பொருள்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து 588 கிராம் ஹெரோயின், 908 கிராம் ஐஸ், 2 கிராம் கொக்கெய்ன், 1 கிலோகிராம் 678 கிராம் கஞ்சா, 599 கஞ்சா செடிகள், 101 கிராம் குஷ் ரக போதைப்பொருள், 26 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 2ஆயிரத்து 414 போதை மாத்திரைகள், 74 கிராம் மதனமோதகம் மற்றும் 53 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்பை முழுமையாக ஒழிப்பதற்காக முப்படைகள், பொலிஸார் மற்றும் புலனாய்வுப் பிரிவினரை ஒருங்கிணைத்து இந்த “முழு நாடுமே ஒன்றாக” தேசியத் திட்டம் ஜனாதிபதியின் நேரடி மேற்பார்வையின் கீழ் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.