ஒரே நாளில் 906 பேர் கைது: தீவிரப்படுத்தப்படும் விசாரணை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் ஒழிப்பிற்காக முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளில் 906 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை நேற்றுமுன்தினம்(04.04.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் 906 பேர் கைது
பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஒரே நாளில் நாடளாவிய ரீதியில் 911 விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையுடன் தொடர்புடைய 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 15 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரப்படுத்தப்படும் விசாரணை
சந்தேகநபர்களிடமிருந்து 409 கிராம் ஹெரோயின், 726 கிராம் ஐஸ், ௨௫ கிலோ 993 கிராம் கஞ்சா, 2 ஆயிரத்து 689 கஞ்சா செடிகள், 92 மில்லிகிராம் குஷ் ரக போதைப்பொருள், 112 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 23 ஆயிரத்து 93 போதை மாத்திரைகள், 5 கிலோ 478 கிராம் மதனமோதகம் மற்றும் 409 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
நாட்டைப் போதைப்பொருள் அற்ற வலயமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி வழங்கியுள்ள விசேட இலக்குகளுக்கு அமைய, பொலிஸாரும் பாதுகாப்புப் பிரிவினரும் இவ்வாறான அதிரடிச் சோதனைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.