பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை : 120 வெளிநாட்டினர் அதிரடியாகக் கைது
இராஜகிரிய - மெதவெலிக்கடை வீதிக்கு அருகாமையில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 120 வெளிநாட்டினர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(03.05.2026) இடம்பெற்றுள்ளது.
கைதானோர் தொடர்பான விபரம்
கைது செய்யப்பட்டவர்களில் சீனா, மலேசியா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட ஒன்பது நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் அடங்குகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டதிட்டங்களுக்கு முரணான வகையில் தங்கியிருந்தமை மற்றும் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பாரிய அளவிலான இணையவழி நிதி மோசடிகளுடன் இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து இணையவழி குற்றங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் சுமார் 10 கோடி ரூபாவுக்கும் அதிக சந்தைப் பெறுமதியுடைய நவீன கணினிகள் மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகை தந்த நோக்கம், தங்கியிருந்த காலப்பகுதி மற்றும் முன்னெடுத்து வந்த செயற்பாடுகள் குறித்து பொலிஸாரும் குடிவரவு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன், இலங்கையை மையமாகக் கொண்டு சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்படும் இணையவழி மோசடிகளைக் கண்டறியும் நோக்கில் இந்தச் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் மேலதிக ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
2.5 மில்லியன் டொலர் நிதி மோசடி! மரணித்த அதிகாரி தொடர்பில் அநுர அரசாங்கத்திடம் விசாரணை கோரும் எதிர்க்கட்சி
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு