எமது நிலத்தை மீட்க போராடுவது இனவாதமா.. அமைச்சரின் கருத்துக்கு பதிலடிக் கொடுத்த கஜேந்திரகுமார்
யாழ். நயினா தீவு மற்றும் நாக விகாரை பிக்குமாரே தையிட்டி விகாரை சட்ட விரோதமானது என தெரிவித்த பின்னரும், அமைச்சர் விமல் ரட் நாயக்க யாழில் பொய்களை கூறுவதை நிறுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்று(03.05.2026) ராஜா கிறீம்கவுஸ் சரஸ்வதி மண்டபத்தில் சட்டத்தரணி சுகாஷ் எழுதிய 'தமிழன் கனவு' நூல் வெளியீட்டில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம் பற்றி பேசுவது தவறு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்களின் காணிகளை சட்டவிரோதமான முறையில் அபகரித்து தையிட்டியில் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானத்துக்கு எதிராக போராடும் மக்களுக்கு குரல் கொடுப்பதை யாழ். மே தின கூட்டத்திற்கு வருகை தந்த அமைச்சர் விமல் ரட்நாயக்க இனவாதம் என்கிறார். மக்களின் காணியை மக்களுக்கே தெரியாமல் இராணுவத்தினரால் சட்டவிரோதமாக பிடித்து கட்டுமானம் ஒன்றை கட்டி, அதற்கு திஸ்ஸ விகார என்ற பெயரை வைத்துள்ளனர்.

இந்த விகாரை சட்ட விரோதமான முறையில் தனியார் காணிகளை அபகரித்து கட்டப்பட்டுள்ளது என தெளிவாக நயினாதீவு விகாராதிபதியும் யாழ் நாகவிகாராதியும் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார்கள்.
இவற்றையெல்லாம் அறிந்து விட்டு அறியாதவர் போல் தையிட்டி விவகாரத்தில் தமிழ் கட்சி இனவாதமாக செயல்படுகிறது என மேடையில் பேசுகிறார்.
அபகரிக்கப்பட்ட காணிகள்
தையிட்டியில் மக்களின் காணியை திருட்டுத்தனமாக அபகரித்து கட்டப்பட்ட சட்ட விரோத கட்டுமானத்துக்கு எதிராக மக்கள் போராட்டத்தை ஆரம்பித்த நிலையில் நாமும் தமிழ் தேசிய பேரவையும் ஆதரவை வழங்கி அவர்களுடன் நில உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

இதனைப் பொறுக்க முடியாத தேசிய மக்கள் சக்தியின் அமைச்சர் விமல் ரட்நாயக்க யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மே தின கூட்டத்தில் தையிட்டு காணி அளவீட்டை இனவாத தமிழ் தலைமைகள் குழப்புவதாக ஒரு கருத்தை முன்வைத்திருக்கிறார். மக்களின் காணியை அபகரித்ததை மக்களிடம் திருப்பிக் கொடுக்க முடியாத அரசாங்கம் அதற்கு எதிராக மக்களுடன் சேர்ந்து போராடும் எம்மை இனவாதிகள் என்கிறார்கள்.
அரசியல் சாயம் பூசுவதை தமிழர் கட்சிகள் நிறுத்த வேண்டும்..
இந்த நிகழ்வில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் சட்டத்தரணிகள் இருக்கின்ற நிலையில் அவர்களிடம் நான் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன்.
தையிட்டி மக்கள் தமது நிலத்துக்காக போராடுகிறார்கள் அவர்கள் சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார்கள் ஆனால் சிலர் மட்டும் அவர்களின் போராட்டத்தோடு தொடர்ந்தும் பயணிக்கின்றனர்.

சட்டத்தரணிகளுக்கும் பாரிய பொறுப்பு இருக்கிறது நீதிமன்றத்தில் சட்டத்தை பேச வேண்டும் அல்லது மக்களிடம் சட்டம் தொடர்பான அறிவை போதிக்க வேண்டும்.
இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் நிலத்தை இழந்த மக்களுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி போராடும் போது அரசியல் சாயம் பூசப்படுகிறது நீங்கள் சட்டத்தரணிகள் நீங்கள் அந்தப் போராட்டத்திற்கு சென்று மக்களுக்கு தெளிவுபடுத்துங்கள் அதை நீங்கள் செய்ய வேண்டிய கடமையும் இருக்கிறது.
ஆகவே உரிமைக்கான போராட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் எம்மை இனவாதிகள் என தெற்கு சித்தரிக்கும் ஆனால் அந்த இனவாதத்தை நாங்கள் தொடர்ந்தும் செய்வோம் என்றார்.
மேலதிக தகவல் - கஜீ
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்
விஜய்யின் வீடு தேடி பூங்கொத்துடன் வந்த நபர்! படையெடுக்கும் முக்கிய அதிகாரிகள் - அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு