ஊரடங்கு சட்டத்தை மீறிய 80 பேர் கைது - நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 15 பேருக்கு அபராதம்
மட்டக்களப்பு - களுவாஞ்சிக்குடி பகுதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி வீதிகளில் உலாவித் திரிந்தவர்கள் மற்றும் முகக்கவசம் அணியாது சுகாதார நடைமுறையைப் பின்பற்றாத 80 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் அவர்களில் 15 பேருக்கு தலா 10 ஆயிரம் ரூபா வீதம் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக இன்று களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 20ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 6ம் திகதி வரையில் அரசாங்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஊரடங்கு சட்டத்தை மீறிக் குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பகுதிகளில் வீதிகளில் முகக்கவசம் அணியாது சுற்றித் திரிந்தவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



