லண்டனில் எலும்பு சிகிச்சை நிபுணரின் தவறால் 789 சிறுவர்கள் பாதிப்பு
உலகப்புகழ் பெற்ற லண்டனின் சிறுவர் மருத்துவமனையில் பணியாற்றிய என்பு சிகிச்சை நிபுணர் யாசர் ஜப்பார், மேற்கொண்ட தவறான அறுவை சிகிச்சைகள் மூலம் சுமார் 94 சிறுவர்களுக்கு தீராத உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தியிருப்பது மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த 2017 முதல் 2022 வரை ஜப்பார் மொத்தம் 789 சிறுவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 94 சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்களில் 35 பேருக்கு மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சிறுவர்கள் பாதிப்பு
இதன்போது, முறையான காரணம் இன்றி அறுவை சிகிச்சை செய்தமை, எலும்புகளைத் தவறான இடத்தில் துண்டித்தமை, பொருத்தப்பட்ட உலோகக் கம்பிகள் மற்றும் பிளேட்டுகளை முன்கூட்டியே அகற்றியமை எனப் பல விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

ஜப்பாரிடம் சிகிச்சை பெற்ற சிறுமி ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பினால், அவரது இடது காலின் கீழ் பகுதியை அகற்ற வேண்டிய (Amputation) சூழல் ஏற்பட்டுள்ளது.
மற்றொரு சிறுவன் தேவையற்ற கணுக்கால் அறுவை சிகிச்சையால் தீராத வலியுடன் கல்லூரியை விட்டு விலகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அதே போன்று, மருத்துவமனை நிர்வாகம் இந்த விவகாரத்தில் மெத்தனமாகச் செயல்பட்டதாகப் பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 2021-லேயே சக மருத்துவர்கள் ஜப்பாரின் சிகிச்சை முறை குறித்து எச்சரித்தும், 2022 ஜூன் வரை அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் லண்டன் பொலிஸார் (Metropolitan Police) இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது.
மருத்துவமனை நிர்வாகம்
இந்தச் சம்பவம் மருத்துவமனையின் வரலாற்றில் ஒரு கருப்பு தினம் என்று அதன் தலைமை நிர்வாகி மேத்யூ ஷா ஒப்புக்கொண்டுள்ளார்.

"பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இழந்த நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்போம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது யாசர் ஜப்பார் வெளிநாட்டில் வசிப்பதாகவும், அவர் பிரித்தானியாவில் மருத்துவம் பார்க்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam