கிளிநொச்சியில் அடையாளம் காணப்பட்ட 7 கைக்குண்டுகளை அகற்ற நடவடிக்கை
கிளிநொச்சி - வன்னேரிக்குளம் பகுதியில் நேற்றைய தினம் 7 கைக்குண்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அக்கராயன் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வன்னேரிக்குளம் பகுதியில் வயல் நிலம் பண்படுத்திக் கொண்டிருந்த நிலையில் இவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பில் உடனடியாக காணி உரிமையாளரால் அருகில் உள்ள இராணுவத்தினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து அப்பகுதிக்கு உடன் விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த கைக்குண்டுகளை பாதுகாப்பாக அடையாளப்படுத்திய நிலையில் அவற்றை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் அனுமதி பெறப்பட்டு விசேட அதிரடிப்படையினர் மூலம் அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றி செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






