7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பொலிஸாரிடம் சரணடைய இணக்கம்!
மத்திய கிழக்கில் தலைவறைவாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த 7 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கைப் பொலிஸ் அதிகாரிகளிடம் சரணடைய இணக்கம் தெரிவித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
அத்தோடு,போதைப்பொருளுக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட செயலகத்தில் நேற்று(9) நடைபெற்ற முழு நாடும் ஒன்றாகச் செயற்றிட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கடுமையான நடவடிக்கை
அவர் மேலும் தெரிவித்ததாவது, "போதைப்பொருள் ஒழிப்புக்குக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புக்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.

சமூகக் கட்டமைப்பில் இருந்து போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க வேண்டும் என்பதன் அவசியத்தை மக்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள்.
போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் வலையமைப்பை இல்லாதொழிப்பதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அரசின் செயற்பாடு
போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்கள் ஒன்றுக்கொண்டு தொடர்புப்பட்டுள்ளது. ஆகவே, போதைப்பொருள் வர்த்தக வலையமைப்பை இல்லாதொழித்தால் பாதாளக் குழுக்களைக் கட்டுப்படுத்தலாம்.

முழு நாடும் ஒன்றாகச் செயற்றிட்டம் எதிர்கால இளம் தலைமுறையினரை இலக்காகக் கொண்டது.
நாடளாவிய ரீதியில் சகல மாவட்டங்களிலும் இந்தச் செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படும். அரசின் செயற்பாடுகளுக்கு நாட்டு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.