ஈரானில் சிக்கிய 612 இந்திய கடற்றொழிலாளர்கள்: மீட்பு கோரி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஈரானில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டு கடற்றொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்க வேண்டும் என வலியுறுத்தியும், இந்திய ஒன்றிய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டம் இன்று (09.03.2026) இடம்பெற்றுள்ளது.
கண்டன ஆர்ப்பாட்டம்
அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர்நிலையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த 612 இந்திய கடற்றொழிலாளர்கள் ஈரானில் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.
இதுவரை இவர்களை மீட்டெடுக்க இந்திய ஒன்றிய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து சமதா கட்சி சார்பில் இன்று (09) முற்பகல் 11.00 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த 612 கடற்றொழிலாளர்களையும் உடனடியாக மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சமதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பூங்கா மோகன் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணித் தலைவர் கெளதம் முன்னிலை வகித்தார்.

சமதா கட்சியின் அகில இந்திய முதன்மைப் பொதுச் செயலாளர் கோன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அதேபோன்று சிங்காரவேலர் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பி.ஜி. ஆனந்தனும் கண்டன உரையாற்றினார்.
மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.மு.க.வின் பொதுச் செயலாளர் பா. பிரபாகரன், பொருளாளர் ஆர்.வி. தேசப்பன், சந்திரசேகரன், செல்வராஜ், மீனாட்சி சரவணன், கார்த்தி சத்தியா, குபேரா, சாந்து பாஷா, சரவணா, ரமேஷ், தங்கராஜ், சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.