அருட்தந்தை மீது தாக்குதல் நடத்திய 6 பொலிஸாரும் பணி இடைநீக்கம்
கத்தோலிக்க அருட்தந்தையொருவரை தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 6 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பணி இடைநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பணி இடைநீக்கம் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களில் 3 சார்ஜன்ட்களும் 3 கான்ஸ்டபிள்களும் அடங்குகின்றனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ.வூட்லர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் விளக்கமறியல்
சந்தேகநபர்களான 6 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பஹா பிரதம நீதவான் சீலனி பெரேரா முன்னிலையில் வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர்களை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்களை அன்றைய தினம் அடையாளம் காணும் அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
பணி இடைநீக்கம்
தாக்குதலுக்குள்ளானதாகக் கூறப்படும் கத்தோலிக்க அருட்தந்தை தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகிறார் என அவர் சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி நெவில் அபேரத்ன நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

கத்தோலிக்க அருட்தந்தை வழங்கிய முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபர்களான பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.