1000 கோடி ரூபா ‘ஐஸ்’ போதைப்பொருள் விவகாரம்: 6 உயரதிகாரிகளுக்கு உடனடி இடமாற்றம்!
கொழும்பு துறைமுகத்தில் சுமார் 1,000 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் அடங்கிய கொள்கலன் கைப்பற்றப்பட்ட சம்பவத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் அலட்சியப் போக்கு காரணமாக, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் ரன்மல் கொடிதுவக்கு உள்ளிட்ட 6 சிரேஷ்ட அதிகாரிகள் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
இந்த அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்காக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெற பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் ரன்மல் கொடிதுவக்கு, பிரதி பொலிஸ் அதிபர் அசோக்க தர்மசேன, போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், இரண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி ஆகியோர் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் கீழ்நிலை அதிகாரிகள் பலரும் எதிர்காலத்தில் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் சிரேஷ்ட பிரதி பொலிஸ் அதிபர் ரன்மல் கொடிதுவக்குவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், இந்த 'ஐஸ்' கொள்கலன் தொடர்பான விசாரணை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு இது குறித்து சுங்கத் திணைக்களம் மற்றும் நீதிமன்றத்திற்கு அறிவித்து விசாரணைகளைத் தொடங்கியபோதிலும், அந்த விசாரணைகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
பாகிஸ்தானில் இருந்து கொண்டுவரப்பட்ட இக்கொள்கலன் சுமார் ஒரு மாத காலமாக கொழும்பு துறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடத்தல்காரர்கள் அதனை துறைமுகத்திலிருந்து வெளியேற்ற முயன்றதுடன், அது முடியாதபட்சத்தில் மீண்டும் மறுஏற்றுமதி செய்யவும் திட்டமிட்டிருந்தனர்.
போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விசாரணை மந்தமாக இருந்த நிலையில், பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் தனியாக விசாரணையைத் தொடங்கியது. அவர்கள் சுங்கத் திணைக்களத்திற்கு அறிவித்து, நீதிமன்ற உத்தரவைப் பெற்று கொள்கலனைத் திறந்து சோதனையிட்டதில் 467 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட 7 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.