தேசியப்பட்டியலுக்கு 500 மில்லியன் இலஞ்சம்! பெரும் சிக்கலில் சஜித்
நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, கடுமையான உள் நெருக்கடியை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மீது சுமத்தப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபா இலஞ்சம் தொடர்பிலான குற்றச்சாட்டே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, கட்சியின் அநேகமான உறுப்பினர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சஜித் பிரேமதாச
கடந்த 11 ஆம் திகதி நடத்தப்பட்ட கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் சஜித் பிரேமதாச, 500 மில்லியன் ரூபா இலஞ்சம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தத் தவறிவிட்டார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக, கட்சி மீது சுமத்தப்பட்டுள்ள கடுமையான அவதூறிலிருந்து விடுபட பல்வேறு முறையில் எதிர்ப்பை நடத்த எம்.பி.க்கள் குழு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்ற விவாதங்களில் பங்கேற்பதைத் தவிர்ப்பது, தொலைக்காட்சி நேர்காணல்களில் பங்கேற்பதைத் தவிர்ப்பது, வெகுஜன ஊடகங்களில் கட்சி சார்பாகப் பேசுவதைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கட்சியின் தேர்தல் நிதிக்கு எந்த நபரிடமிருந்தும் 500 மில்லியன் ரூபா பெறப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
முறையான விசாரணை
இது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை நடத்துவதே தனது முதன்மை நோக்கம் என்று ரஞ்சித் மத்தும பண்டார கூறியுள்ளார்.
பொலன்னறுவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பிரபல அரிசி தொழிலதிபர் ஒருவர் தேசியப் பட்டியல் பதவிக்கு 500 மில்லியன் கொடுத்ததாக குறித்த குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவரது பெயர் தேசியப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தாலும், பதவி கிடைக்காததால் இந்தத் தகவலை வெளியிட நடவடிக்கை எடுத்து வருவதா சில தென்னிலங்கை சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தவிர, களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் ஒருவரும் பதவிக்காக அதிக பணம் கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முந்தைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த இந்த தொழிலதிபர், மருத்துவத் துறையில் ஒரு அமைப்பின் தலைவராக பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசியப் பட்டியல்
இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்த ரஞ்சித் மத்தும பண்டார, “தேசியப் பட்டியலில் உள்ள 29 நபர்களிடம் இருந்து கட்சித் தலைவரோ அல்லது கட்சியோ அத்தகைய நிதியைப் பெறவில்லை.
இருப்பினும், அந்தப் பணத்தை கட்சியின் ஆலோசகர் ஒருவர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி கட்சியின் ஒரு வலுவான பிரிவு தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு கடிதம் அனுப்பத் தயாராகி வருகிறது’’ என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |