விசேட சுற்றிவளைப்பில் ஐந்து மோட்டார் வாகனங்கள் மீட்பு
இரத்தினபுரி - கலவான (Kalawana) பிரதேசத்தில் சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 70 மில்லியன் ரூபா பெறுமதியான ஐந்து மோட்டார் வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வலான குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.
செல்வந்த வாகன வர்த்தகர் ஒருவர் போலியான சேசிஸ் மற்றும் என்ஜின் எண்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் வாகனங்களை விற்பனை செய்யும் சட்டவிரோத வியாபாரத்தை நடத்தி வருவதாக குற்றத்தடுப்பு பிரிவினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.
சந்தேக நபர் மயக்கம்
இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, வாகனங்கள் சாதுர்யமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொலிஸாரினால் பொறுப்பேற்கப்பட்ட வாகனங்களில், பழுதடைந்த நிலையிலும், ஓட்ட முடியாத நிலையிலும் இருந்த ஜப்பானிய கால்டஸ் காரின் செஸி பகுதி, சட்டவிரோதமாக காரில் இருந்து அகற்றப்பட்டு, அந்த இடத்திலிருந்த மற்றொரு ஜப்பானிய சுசுகி காரின் செஸி பகுதியில் இணைக்கப்பட்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சுற்றிவளைப்பின் போது பீதியடைந்த சந்தேக நபர் மயக்கமடைந்து இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |