வடக்கில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் (Photos)
தியாகி பொன் சிவகுமாரனின் 48 ஆவது ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் உரும்பிராயில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையினால் அனுஷ்டிக்கப்பட்டது.
பிரதேச சபையின் அவைத் தீர்மானத்தின் பிரகாரம், இன்று காலை உரும்பிராயில் உள்ள தியாகி பொன்.சிவகுமாரன் உருவச்சிலை வளாகத்தில் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி அனுஷ்டிப்பு
இவ் அஞ்சலி நிகழ்வில் பொது ஈகைச் சுடரினை தியாகி பொன் சிவகுமாரனது சகோதரி சிவகுமாரி ஏற்றி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தியாகி சிவகுமாரனின் சிலைக்கான மலர் மாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அணிவித்தார்.
அதனைத் தொடர்ந்து வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மலரஞ்சலியை அடுத்து தமிழ்த் தேசியத்தில் சிவகுமாரனின் வகிபாகம் பற்றி உரைகள் நிகழ்த்தப்பட்டன.
வருடா வருடம் பொன். சிவகுமாரனின் நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப்பிரதேச சபையினால் மேற்கொள்வது என பிரதேச சபையில் உறுப்பினர் இ.ஐங்கரனால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.