தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு
சுமார் 488 சிறுவர்கள் தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட வழக்கு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் இதுவரை பதிவு செய்யப்பட்டிருப்பதாக புத்தளம் மாவட்ட முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை நிதிய பணிப்பாளர் ஜுவைரியா முகைதீன் தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக அதிகாரம் மிக்க சமய தலைவர்களால் நடைபெறும் பாலியல் ரீதியான அநீதிகள் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு எதிராக கண்டனத்தையும் நீதிக்கான கோரிக்கையையும் வெளிப்படுத்தும் வகையில் மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஏற்பாடு செய்த கண்டனப் பேரணி இன்றைய தினம் (29) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம் பெற்றது.
இதன்போது கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
போராட்டம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தப் போராட்டமானது வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததும், மிகவும் வேதனையானதும், வலியானதுமாக நாங்கள் கருதுகிறோம்.

அனுராதபுரத்தில் 13 வயது சிறுமிக்கு ஏற்பட்ட இந்த அநீதிக்கு, பாலியல் வல்லுறவுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டியது இலங்கையில் இருக்கும் அத்தனை ஆண், பெண்களுடைய கடமையுமாகும்.இருந்தபோதிலும், ஒரு குறிப்பிட்ட சாரார் தான் நாங்கள் இதில் பங்கேற்க வேண்டிய ஒரு துரதிர்ஷ்ட நிலை இருக்கிறது.
போராட்டத்தில் முழுமையாக பங்கு பெறும்போது தான் எங்களுக்கான மாற்றத்தையும், வெற்றியையும் அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்.
வழக்கு
அனுராதபுரத்தில் நடைபெற்ற இந்த வல்லுறவு, அதாவது பௌத்த பிக்கு ஒருத்தரால் நடத்தப்பட்ட இந்த வல்லுறவானது, உடனடியாக அவருக்குத் தண்டனை வழங்க வேண்டிய ஒரு செயல்பாடாகும்.

இருந்தபோதிலும், அவருக்கான தண்டனையில் இருந்து அவருக்கு பிணை கிடைத்தது மிகவும் மனவேதனையும், வருத்தமாக உள்ளது.
அதே நேரத்தில், நான் நினைக்கிறேன். சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையில் 2018இல் இருந்து 2022 வரைக்கும் 488 சிறுவர்கள், தேரர்கள் மூலம் பாதிக்கப்பட்ட அல்லது பாலியல் ரீதியான சேட்டைகளுக்கு உட்பட்ட 488 பிள்ளைகளுக்கு எதிரான வழக்கு இதுவரை பதிவு செய்யப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.