நாட்டில் எயிட்ஸ் காரணமாக இந்த ஆண்டில் 43 பேர் உயிரிழப்பு
இலங்கையில் எய்ட்ஸ் நோய் காரணமாக 43 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேசிய பால்வினை நோய் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தினால் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் காலாண்டில் பதிவானோர்
இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் எச்ஐவி அல்லது எய்ட்ஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 485 என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 41 நிலையங்களில் இலவசமாக எச்ஐவி தொற்று குறித்த பரிசோதனைகளை செய்து கொள்ள முடியும் எனவும், இணைய வழியாக இதற்கான முன்பதிவுகளை செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பீடு செய்யும் போது இலங்கையில் எச்ஐவி தொற்றாளர் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்றது.
எனினும் அண்மைக்காலமாக எச்ஐவி தொற்றாளர் எண்ணிக்கையின் அதிகரிப்பு கிரமமாக உயர்வடைந்து செல்லும் போக்கு பதிவாகியுள்ளது.
எச்ஐவி தொற்று
நாட்டில் தற்பொழுது 5496 பேர் எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 4095 பேர் ஆண்கள் எனவும் 1391 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் 607 பெயர் எச்ஐவி தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
எச்ஐவி குறித்த பரிசோதனைகளை செய்து கொள்வதற்கு www.know4sure.lk என்ற இணைய முகவரிக்குள் பிரவேசித்து முன்பதிவு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பொதுமக்கள் 0112 667 163 மற்றும் 0703 633 533 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்று கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |