ஒரே நாளில் 434 பேர் கைது! மதுபோதையில் வாகனம் இயக்கிய 272 பேர் சிக்கினர்
பொலிஸாரால் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் கீழ், நேற்று சோதனை நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சோதனையின்போது நாடு முழுவதும் தீவிர தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டதுடன், பெருமளவிலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது 26 ஆயிரத்து 523 நபர்கள் பொலிஸாரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
நாடு தழுவிய ரீதியில் பரிசோதனைகள்
சந்தேகத்தின் பேரில் 434 பேர் கைது செய்யப்பட்டுள்ளமையுடன், பல்வேறு குற்றச் செயல்களுடன் நேரடியாகத் தொடர்புடைய மேலும் 13 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீதிமன்றங்களால் பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் இருந்த 348 பிடியாணைகளில், 253 பிடியாணை உத்தரவுகளுக்கு அமைய தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதிப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனைகளில் போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மதுபோதையில் மற்றும் மது அருந்திவிட்டு ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய 272 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதிகளில் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 101 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாகப் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 4 ஆயிரத்து 443 பேருக்கு எதிராக வழக்குப் பதிவுகள் மற்றும் அபராத நடவடிக்கைகள் விதிக்கப்பட்டுள்ளன.
குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தவும், போதைப்பொருள் பாவனையைத் தடுக்கவும், வீதி விபத்துகளைக் குறைத்து வீதிப் பாதுகாப்பை பலப்படுத்தவும் இத்தகைய நாடு தழுவிய சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.