பொலிஸாருக்கு 400 மின்சார கார்கள் - புதிய சீருடைகளும் அறிமுகம்!
இலங்கை பொலிஸ் துறையை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் கீழ், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு 400 மின்சார கார்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 65,000 மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதனை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டில் 400 மின்சார கார்கள் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
நவீன பொலிஸ் சேவை
மேலும், பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் பொலிஸ் பரிசோதகர் வரையிலான அதிகாரிகளுக்கு வரியில்லா மின்சார மோட்டார் சைக்கிள்களை வழங்கும் திட்டம் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்காக வட்டியில்லாக் கடன் வசதிகளும், பொருந்தக்கூடிய வரிகளை நீக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
192 பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்கான குடியிருப்புகளும் நிர்மாணிகப்படவுள்ளன. மேலும் 389 பொலிஸ் நிலையங்களில் CCTV கண்காணிப்பு கமராக்களைப் பொருத்தல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது . இதற்காக 308 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது.
உடலில் பொருத்தக்கூடிய கமராக்கள் (Body Cameras) மற்றும் தேவையான உபகரணங்களுடன் கூடிய புதிய பொலிஸ் சீருடைகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. சமூக ஊடகங்களில், குறிப்பாக Facebook இல் பரவி வரும் புதிய சீருடை வடிவமைப்பே அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ள சீருடை அல்ல என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
புதிய சீருடை தொடர்பான கலந்துரையாடல்கள் இன்னும் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். நிறுவன ரீதியான சீர்திருத்தங்கள், அதிகாரிகளின் மனப்பாங்கில் மாற்றங்கள் மற்றும் நவீன உபகரணங்களை வழங்குவதன் மூலம் தொழில்முறைத் தன்மை கொண்ட நவீன பொலிஸ் சேவையை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.