அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 39 ஆம் ஆண்டு நினைவுதினம் அனுஷ்டிப்பு
மன்னார் - வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் 39 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு இன்று (6.1.2024) சனிக்கிழமை வங்காலை புனித ஆனாள் ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் தலைமையில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது.
அரச படைகளால் படுகொலை
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தும், உயிரிழந்த மக்களின் உடல்களை மீட்டு அடக்கம் செய்யவும், பல்வேறு மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்த மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்குத்தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டார்.
மேலும் அவருடன் பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டனர். திருப்பலியின் போது அருட்தந்தையுடன் சேர்ந்து இன்னுயிர் நீத்த உறவுகளுக்கு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன் போது படுகொலை செய்யப்பட்ட அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளாரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
அதனைத்தொடர்ந்து அருட்பணி மேரி பஸ்ரியன் அடிகளார் மற்றும் அவருடன் சேர்ந்து உயிர் நீத்தவர்களின் 39 வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி இரத்ததான நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



