மாவிலாறு அணை உடைப்பு! கிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட 3500 குடும்பங்கள்
வரலாறு காணாத வகையில், மாவிலாறு அணை உடைப்பெடுத்ததன் காரணமாக ஏற்பட்ட அதிவேக வெள்ள நீரோட்டம், கிண்ணியா பிரதேசத்தில் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் நேரடி விளைவாக, குறிஞ்சாக்கேணி பாலம் (தற்காலிகப்பாலம்) முழுமையாக உடைந்துள்ளதால், கிண்ணியாவுக்கான தரைவழித்தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவில் இது ஒரு மிகப்பெரிய அனர்த்தமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
3500 குடும்பங்கள் பாதிப்பு
பாலத்தின் உடைப்பினால், ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 3500 குடும்பங்கள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பிரதான நகரத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள் குறிஞ்சாக்கேணி பாலம் உடைந்ததுடன், கீழ்க்கண்ட ஐந்து கிராம சேவையாளர் பிரிவுகளின் சுமார் 14,000 இற்கும் மேற்பட்ட மக்கள் நேரடியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிஞ்சாக்கேணி, நடுத்தீவு, முனைச்சேனை, காக்காமுனை கச்சக்கொடித்தீவு இந்த ஐந்து பகுதிகளும் கிண்ணியா நகருக்கான அனைத்து நிலப் போக்குவரத்துகளையும் இழந்துள்ளதால், மக்கள் உணவு, மருந்துப்பொருட்கள் போன்ற தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்காகக்கூட கிண்ணியா நகரை வந்தடைய முடியாத துயரமான நிலை ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், குறித்த பகுதிகளில் உணவுப் பொருட்கள் மற்றும் மருத்துவ வசதிகள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
குறிப்பாகப் பால்மா, மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கான தேவை உடனடியாக பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது.
அனர்த்தத்தில் சிக்குண்டவர்களை காப்பாற்றும் பணியில் முப்படையினர்
வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்ட மக்களைக் காப்பாற்றும் பணியில் முப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்.
படகுகள் மூலம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.
மாவிலாறு வெள்ளம் காரணமாக, குறித்த கிராமங்களைச் சுற்றியுள்ள வயல் நிலங்கள் மற்றும் கால்நடைகள் வெள்ள நீரில் மூழ்கிப் பாரிய சேதமடைந்துள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே குறிஞ்சாக்கேணியில் நிரந்தரப் பாலம் இல்லாததால், இங்கு தற்காலிகப் பாலம் பயன்பாட்டில் இருந்தது. அத்தோடு பாலக்கட்டுமான பணிகள் முடியும் வரைக்கும் மக்களின் பயன்பாட்டுக்காக கொண்டுவரப்பட்ட இயந்திரப் படகும் இன்னும் சேவையில் விடுபடுத்தப்படாமல் உள்ளது.
இதன் காரணமாக, இந்தத் தற்காலிகப் பாலம் உடைந்திருப்பது அப்பகுதி மக்களின் வாழ்க்கையை மேலும் கேள்விக்குறியாகியுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உடனடியாக படகு சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கும் அத்தியாவசிய உதவிகளை வழங்குவதற்கு அரசாங்கமும், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளும் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தலையில் துண்டு.. தலைமறைவான குணசேகரன்! சொத்து பற்றிய உண்மையை போட்டுடைத்த ஜனனி! எதிர்நீச்சல் 2 ப்ரோமோ Cineulagam
விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் அழகே அழகு தொடர்... புத்தம் புதிய சீரியல், யார் யார் நடிக்கிறார்கள் பாருங்க Cineulagam