சொத்து விபரங்களை சமர்ப்பிக்க தவறிய சுமார் 34,000 அதிகாரிகள்! ஏற்பட்டுள்ள சிக்கல்
ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை தாமதமாக அல்லது சமர்ப்பிக்க தவறிய சுமார் 34,000 அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொது நிதிக் குழுவில் (COPF) தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அதிகாரிகளிடமிருந்து தாமத கட்டணங்களை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விரிவுபடுத்தப்பட்டுள்ள ஆணைக்குழுவின் செயல்பாடுகள்
அதற்கேற்ப செயல்படுவதற்காக ஆணைக்குழுவின் செயல்பாடுகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்கா திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தாமதக் கட்டணங்களை வசூலிக்கும் செயல்முறையிலிருந்து பெறப்படும் அபராத தொகைகள் ஆணைக்குழுவின் நிதியில் வரவு வைக்கப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், ஆணையகத்திற்கு 971 பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும், டிசம்பர் 31, 2026-க்கு முன்னர் 23 பிராந்திய அலுவலகங்களை நிறுவும் இலக்கை அடைவதற்காக, தற்போதுள்ள அரச கட்டடங்கள் மாவட்ட செயலாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்படி, சில கட்டிடங்களைப் புதுப்பித்துப் பயன்படுத்தவும், மீதமுள்ளவற்றை வாடகைக்கு விடவும் திட்டங்கள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.