வீட்டின் நீர் குழாய்க்குள் வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் - தமிழர் பகுதியில் வர்த்தகர் கைது
அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருவாட்டுக்கல் 03 பகுதியில் உள்ள வீடொன்றில் பிளாஸ்டிக் குழாயினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று(02.08.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் இளைஞர்களைக் குறி வைத்து போதைப்பொருள் விற்பனை இடம்பெறுவதாகச் சம்மாந்துறை பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
32 வயது இளைஞர் கைது
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 32 வயதுடையவர் என்றும் பிளாஸ்டிக் குழாய்க்குள் போதைப்பொருள் வைக்கப்பட்டிருந்தது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் 970 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்,மோட்டார் சைக்கிள்,கைப்பேசி ,இலத்திரனியல் தராசு என்பன சான்றுப் பொருட்களாகக் கைப்பற்றப்பட்டுச் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபருக்கு 3 பிடி விறாந்துகள் உள்ள நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.