வெள்ளை மாளிகை அதிகாரிகளாக மேலும் மூன்று இந்தியர்கள் நியமனம்
அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகையின் அதிகாரிகளாக மேலும் 3 இந்தியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளை மாளிகையில் ஏற்கனவே இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக உள்ள நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த பலர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதுடன், தற்போது மேலும் 3 இந்தியர்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகையில் பல்வேறு துறைசார் நிபுணர்கள் அதிகாரிகளாக நியமிக்கப்படுவர்.
இதற்கமைய, பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில் தற்போது 19 இளம் நிபுணர்களை அதிகாரிகளாக நியமித்துள்ளனர்.அதில் 3 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்களாவர்.
இவர்களில், ஜாய் பாசு இதற்கு முன்பு புதிய வர்த்தகங்களுக்கு ஆலோசகராகவும்,உணவு மற்றும் வேளாண்மைக்கான சர்வதேச துறையில் தலைவராகவும் அவர் பணியாற்றியுள்ளார். மேலும்,பெண் நிபுணரான ஜாய் பாசு ஏற்கனவே உலக பொருளாதார மன்றத்தில் வேளாண்மை திட்ட மேலாளராக பணியாற்றியவர் என்றும் தெரியவந்துள்ளது.
சன்னிபட்டேல் மனநல மருத்துவர் ஆவார். குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு சேவை செய்யும் சுகாதார அமைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளதுடன், இந்தியா, தாய்லாந்து, டொமினிக்கன் குடியரசு நாடுகளில் சேவை பணிகளை செய்துள்ளார். பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளையும் வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்,ஆகாஷ் ஷா மருத்துவம் படித்தவர். உடல் நலம் மற்றும் மனித சேவைகள் துறையில் பணியாற்றி வந்தார். கோவிட் நோய்க்கு சிகிச்சை அளிப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.