கனடாவில் இடம்பெறவுள்ள 2ஆவது சோழா கோப்பை போட்டி
உலகத் தமிழ் கோல்ஃப் வீரர்கள் சமூகத்தை ஒருங்கிணைக்கும் இரண்டாவது சோழா கோப்பை (Chola Cup) போட்டி, ஜூன் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை கனடாவின் மஸ்கோகா விரிகுடாவில் நடைபெறவுள்ளது.
இந்த 2ஆவது சோழா கோப்பை போட்டியை 2025 தமிழ் கோல்ஃப் வீரர்கள் சங்கம் (TGA - Tamil Golfers Association) அறிவிக்கின்றது.
2023ஆம் ஆண்டு, போர்த்துகல் நாட்டில் உள்ள ஃபாரோவில் பிரித்தானியா மற்றும் கனேடிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது சோழா கோப்பை போட்டியில் பிரித்தானியா அணி வெற்றி பெற்றது.
அந்த அங்குரார்ப்பண போட்டியின் பாரிய வெற்றியைத் தொடர்ந்து, பலத்த எதிர்பார்ப்புகளுடன் 2025இல் கனடாவில் நடைபெறவிருக்கும் இரண்டாவது போட்டி நடைபெறவிருக்கின்றது.
உலக அரங்கு
தமிழ்ச் சமூகத்தின் திறமை, ஒற்றுமை, மற்றும் கலாசார பெருமைகளை மையப்படுத்தி நடாத்தப்படும் இந்நிகழ்வானது, ஒரு போட்டி என்பதற்கு அப்பால், எமது சமூகத்தின் விடாமுயற்சி, தலைமைத்துவம் மற்றும் சமூக மட்டத்திலான முன்னெடுப்புகளின் தாக்கங்களை உலக அரங்கிலே கொண்டாடுவதற்கான ஒரு தருணமாகவும் அமைகின்றது.
பங்கேற்கும் அணிகள் பிரித்தானிய அணியை, ரதீசன் யோகநாதன் (தலைவர்) மற்றும் சுதன் தியாகராஜா (துணை தலைவர்) வழி நடாத்த, அச்சுதன் கணேசலிங்கம், ஜெயக்கொடி கேசவன், சுரேன் மயில்வாகனம், சிவகணன் கனகதுரை, ரவி ஹரிஹரன், ஸ்கந்தமூர்த்தி ரவிசங்கர், சாந்தகுமார் விக்னேஸ்வரலிங்கம், லியோன் ராசையா ரஞ்சித், முருகேசு லங்காலிங்கம், கஜேந்திரகுமாரன் பத்மநாதன், குகராஜா சண்முகம், பெர்னார்ட் சின்னையா, திருநாவுக்கரசு யாதவன் மற்றும் கஜன் சரவணபவன் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.
கனேடிய அணியை, சிவா சிவராஜ் (தலைவர்) மற்றும் நிறஞ்சன் நடராஜா (துணைத் தலைவர்) வழி நடாத்த, மைக்கேல் அமிர்தநாதன், விக்ரம் சிவராஜ், செந்திலர் செபாஸ்டியன், கெவின் லாரன்ஸ்பிள்ளை, வாணி நவரத்தினம், குமரன் சிவா, குமணன் கோபாலசாமி, அருள் ராஜ்குமார், அரவிந்த் கந்தப்பா, மார்க் அமிர்தநாதன், ஜுகான்சன் தயாளன், ஆண்ட்ரூ யேசுதாசன், வளவன் மனோகரராஜா, பாலமுகுந்தன் சாம்பசிவம், ஸ்டான் முத்துலிங்கம் (புரவலர்) ஆகியோர் கொண்ட அணி களமிறங்கவுள்ளது.
தமிழ் கோல்ஃப் வீரர்கள் சங்கம் பற்றி 2021இல் தொலைநோக்குப்பார்வை கொண்ட தொழில்முனைவரும், நற்பணியாளருமான ரதீசன் யோகநாதன், Lebara Communications நிறுவனத்தின் முன்னாள் நிறுவனரால் நிறுவப்பட்ட தமிழ் கோல்ஃப் வீரர்கள் சங்கம், உலகெங்கிலும் உள்ள தமிழ் கோல்ஃப் வீரர்களை இணைப்பதற்கும், தமிழ் சமூகத்திற்குள் கோல்ஃப் விளையாட்டை வளர்ப்பதற்கும், சமூக கட்டுமானத்திற்கான ஒரு கருவியாக கோல்ப் விளையாட்டைப் பயன்படுத்துவதற்கும் அர்ப்பணிக்கப்பட்டது.
கோல்ஃப் விளையாட்டு
இன்று TGA, பிரித்தானியா (450 உறுப்பினர்கள்), கனடா (400 உறுப்பினர்கள்) மற்றும் மலேசியா இந்திய கோல்ஃப் சங்கம் (MIGA – 1000 உறுப்பினர்கள்) உடனான கூட்டிணைப்புடன் உலகளாவிய சக்தியாக வளர்ந்துள்ளது.
அத்துடன் போட்டித்தன்மையை மையப்படுத்தி விளையாடும் வீரர்களை ஆதரிப்பதோடு, பொழுதுபோக்கை முன்னிலைப்படுத்தி விளையாடும் வீரர்களையும் TGA ஆதரிக்கின்றது.
மேலும், வலுவான TGA அகடமி ஊடாக மானிய விலையில் பயிற்சிகளை வழங்குதல் மற்றும் நன்கொடையாகப் பெறப்பட்ட விளையாட்டு உபகரணங்களை தேவையின் அடிப்படையில் பகிர்ந்தளித்தல் போன்ற செயற்திட்டங்களின் மூலம் கோல்ஃப் விளையாட்டு சமூகத்திலுள்ள அனைவருக்கும் எட்டக்கூடியவாறும் செய்யப்பட்டுள்ளது.
Golf Town, வளர்ச்சிக்கான மூலோபாய கூட்டணி இந்த வருடம், கனடாவிலுள்ள முதன்மை விளையாட்டு நிறுவனங்களில் ஒன்றான Golf Town நிறுவனம் மூன்று வருடகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் TGA Canada நிறுவனத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் நிறைவேற தொலைநோக்குப் பார்வை கொண்ட ஸ்போர்ட்டிங் லைஃப் குழுமத்தின் (Sporting Life Group) தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சாட் மெக்கினன் (Chad McKinnon) அவர்களின் நேரடி வழி காட்டுதலே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
TGA Canada, அமைப்பை ஒரு பன்முகத்தன்மை கொண்ட அமைப்பாக அங்கீகரித்து சமூக மட்டத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய TGA Tour by Golf Town மற்றும் TGA Academy by Golf Town போன்ற திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகின்றது.
பாரி வில்லியம்ஸ் (Barry Williams) உள்ளிட்ட கோல்ஃப் டவுன் (Golf Town) நிறுவனத்தின் நிர்வாகக் குழு, TGA இன் திட்டங்களை ஆதரிப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது.
தமிழர்களின் பாரம்பரியமும் போட்டிக்கான வேட்கையும் ஒன்று சேருமிடத்தில் மஸ்கோகா விரிகுடாவில் வரலாறு படைக்கப்படும் இந்த நிகழ்வைக் காண ஊடகங்கள், ஆதரவாளர்கள் மற்றும் அனுசரணையாளர்களை அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊடக தொடர்பாடல்கள், நேர்காணல்கள், அனுமதிச் சீட்டுகளுக்கு www.tamilgolfersassociation.ca | www.tamilgolfersassociation.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |