இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிராக 26 மனுக்கள் - உயர் நீதிமன்றத்தில் விசாரணை
அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் மீதான விசாரணை நேற்றைய தினம் (04) உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணை நடைபெறுகிறது. இதில் நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
கடுமையான குற்றங்கள்
கடுமையான குற்றங்கள் இன்று மனுதாரர் மலிந்த செனவிரத்ன சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமே டி சில்வா, சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 'கடுமையான குற்றங்கள்' என்பதற்கான வரைவிலக்கணம் மிகவும் விரிவானதாக உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும், பொலிஸ் மா அதிபர் அல்லது பிரதி பொலிஸ் மா அதிபரின் கோரிக்கையின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இரண்டு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை சந்தேகநபர்களைத் தடுத்து வைக்க உத்தரவிடக்கூடிய ஏற்பாடுகள் குறித்தும் அவர் ஆட்சேபனை தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்தச் சட்டமூலம் நீதித்துறையின் அதிகாரங்களை விட அதிகமான அதிகாரங்களைப் பொலிஸாருக்கு வழங்குவதாகவும், அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் வாதிட்டார்.

நீதிமன்ற நடவடிக்கைகள்
சர்வஜன வாக்கெடுப்பு மேலும், கடுமையான குற்றங்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் குறித்த ஊடகச் செய்தி வெளியீடுகளைப் பாதிக்கக்கூடும் என்றும் தெரிவித்தார்.
இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதிப்பதால், சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்பட வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.
சட்டமூலத்தின் சில ஏற்பாடுகள் நீதித்துறையின் தலையீடின்றி தனிநபர் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த நிறைவேற்று அதிகாரத்திற்கு வழிவகுப்பதாகவும் மற்றொரு ஜனாதிபதி சட்டத்தரணியான எராஜ் டி சில்வில் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சந்தேகநபர்களை 72 மணித்தியாலங்கள் பொலிஸ் காவலில் வைத்திருத்தல், பிணை வழங்குவதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் நீதவான்களின் அதிகார வரம்புகள் தொடர்பிலும் சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ ஆட்சேபனைகளை முன்வைத்தார்.