கிண்ணியாவில் 25க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு அபராதம்
கிண்ணியா நகரப் பகுதியில் நிலவிவரும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக பொலிஸார் இன்று (02.3.2026) விசேட அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தற்போது புனித ரமலான் காலம் என்பதால், கிண்ணியா பிரதான வீதியில் பொதுமக்களின் நடமாட்டமும் வாகனப் போக்குவரத்தும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
போதிய அகலமின்மை காரணமாக இப்பாதையில் அடிக்கடி சன நெரிசலும், நீண்ட வாகன நெரிசலும் ஏற்பட்டு வருகின்றது.
சாரதிகளுக்கு அபராதம்
இதனைச் சீர்செய்யும் நோக்கில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போக்குவரத்து விதிமுறைகளை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஒற்றை - இரட்டை நாள் விதிமுறை குறிப்பாக, பிரதான வீதியில் வாகனங்களை நிறுத்துவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள "ஒற்றை நாள் - இரட்டை நாள்" (Odd - Even Day Parking) முறையைச் சரியாகப் பின்பற்றாத சாரதிகள் மீது இதன்போது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த விதியை மீறி வாகனங்களை நிறுத்திய 25-க்கும் மேற்பட்ட சாரதிகளுக்கு இன்று மாத்திரம் தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன், எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இது குறித்து கிண்ணியா போக்குவரத்து பொலிஸ் பிரிவினர் கருத்துத் தெரிவிக்கையில், "கிண்ணியா நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு சாரதிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியமாகும்.
சட்ட நடவடிக்கை
ரமலான் காலத்தில் மாத்திரமன்றி, ஏனைய காலங்களிலும் இந்த ஒற்றை - இரட்டை நாள் வாகன நிறுத்த முறையை ஒரு பழக்கமாக மாற்றுவதே எமது நோக்கமாகும்.

பொதுமக்களின் அசௌகரியங்களைக் குறைப்பதற்காகவே இந்தச் சட்ட நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்." எனத் தெரிவித்தனர்.
இந்த அதிரடி நடவடிக்கையினால் கிண்ணியா நகரின் போக்குவரத்து நிலைமை இன்று ஓரளவுக்குச் சீராகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


