வெளிநாடொன்றில் 24 பாடசாலைகள் தீக்கிரை! பொலிஸாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல்
பிரான்ஸில் பாடசாலைக் கட்டடங்களின் சீர்கேடு, வகுப்பறைகளில் நிலவும் நெருக்கடி மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை ஆகியவற்றைக் கண்டித்து மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் 24 பாடசாலைகள் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இதனால் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
கல்வி அமைச்சின் தகவலின்படி, பிரான்ஸிலுள்ள 3,700 மேல்நிலைப் பாடசாலைகளில் சுமார் 400 முதல் 500 வரையிலான பாடசாலைகள் முழுமையாகவும் பகுதியளவிலும் மூடப்பட்டுள்ளன.
போராட்டம்
பாரிஸின் புறநகர்ப் பகுதியில் ஆரம்பமான இந்தப் போராட்டம் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதுடன், நாளை(06.10.2026) நடைபெறவுள்ள தேசிய அளவிலான கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு முன்னதாக வன்முறைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

மேலும், நாடு முழுவதும் இதுவரை சுமார் 5,000 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொதுச் சொத்துக்களுக்குப் பல மில்லியன் யூரோ நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துபவர்களுக்கு நிதி அபராதம் விதிக்கும் புதிய சட்டமூலத்தைக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், மாணவர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொழிற்சங்கங்களும் மாணவர் அமைப்புகளும் போராட்டத்தைத் தொடர அழைப்பு விடுத்துள்ளன.