வாகன சாரதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்
2026ஆம் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவான 2257 வீதி விபத்துகளில் 2381 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் வூட்லர் தெரிவித்துள்ளார்.
அதிவேகப் பயணம் மற்றும் கவனக்குறைவான வாகனச் செலுத்துதலே பெரும்பாலான உயிரிழப்பு விபத்துகளுக்குக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயிரிழந்தவர்களில் 785 பேர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் என்பதுடன், 227 பேர் பாதசாரிகளாவர்.
பெற்றோர் பொறுப்புடன் செயற்பட வேண்டும்
இலங்கையில் சுமார் 60 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இளம் வயதினர் ஆபத்தான முறையில் மோட்டார்சைக்கிள் செலுத்துவது குறித்தும் பெற்றோர் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், ரம்பேவ பகுதியில் அண்மையில் இடம்பெற்ற மூன்று பேருந்துகள் மோதிய விபத்தில் ஐவர் உயிரிழந்ததுடன், 76 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நால்வர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள 609 பொலிஸ் நிலையங்களில் சுமார் 10000 போக்குவரத்துப் பொலிஸார் வீதி பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்த பொலிஸ் பேச்சாளர், வாகனச் சாரதிகள் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி, பயணிகள் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.