மட்டக்களப்பில் வாகன பரிசோதனையில் சிக்கிய 23 பேர் கைது
மட்டக்களப்பு மாவட்டத்தில் மதுபோதை மற்றும் மதுபானம் பாவித்து நிலையில் வாகனங்கள் செலுத்திய 23 பேரை ஒரே நாளில் நேற்று (11) மாவட்ட போக்குவரத்து பொலிஸார் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குணதிலக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் மற்றும் மதுபானங்கள் பாவித்து வாகனங்களை செலுத்தும் சாரதிகளை கண்டறிய மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸ் தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்துடன் இணைந்து வீதிகளில் பிரயாணிக்கும் வாகனங்களை நிறுத்தி அதன் சாரதிகளை நடமாடும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இந்த விசேட மருத்துவ பரிசோதனை நடவடிக்கையில் அரச மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவித்துவிட்டு வாகனங்களை செலுத்தி சென்ற காத்தான்குடியில் 15 பேரையும், ஏறாவூரில் 5 போரையும், வாழைச்சேனையில் 3 பேருமாக 23 பேரை கண்டறிந்து கொண்டதையடுத்து அவர்களை கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களை அந்தந்த பகுதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் அவர்களை அந்தந்த பகுதியில் உள்ள நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.




