22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் விளைவுகள் சில நாட்களில்..! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் உண்மையான விளைவுகள் அடுத்த வாரம் முதல் மக்களுக்கு தெரியவரும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன்தினம்(25.09.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தற்போது நாட்டின் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுவிட்டது. என்பதால் அது முடிந்துவிட்டதாக கூறுகின்றோம். ஆனால் உண்மையில் 22ஆவது திருத்தம் இப்போதுதான் ஆரம்பிக்கிறது.
அடுத்த வாரம் முதல் அதன் நன்மைகள் மற்றும் பாதிப்புகளை மக்கள் புரிந்துகொள்ளத் தொடங்குவார்கள்.
சட்டங்கள் காகிதத்தில் எழுதப்பட்டிருக்கும் போது அவற்றின் விளைவுகளை மக்கள் உணரமாட்டார்கள். அவை நடைமுறைக்கு வந்து அதன் விளைவுகள் மக்களை சென்றடையும் போது தான் நாம் என்ன செய்துகொண்டோம் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
நீதித்துறையின் சுதந்திரம் பாதிப்பு
22ஆவது திருத்தத்துக்கு சிவில் சமூகத்தினர், அரசியல் தலைவர்கள், இந்த நாட்டின் அறிஞர்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் ஏன் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும், நீதித்துறையின் சுதந்திரம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதும் அப்போது மக்களுக்கு தெளிவாகும். 22ஆவது திருத்தத்துடன் ஊழல் எதிர்ப்புச் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

நானும் பேராசிரியர் ஜீல் பீரிஸ் உள்ளிட்ட சிவில் சமூகத்தினரும் அதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தோம். என்னுடன் மனுதாரராக இருந்த முன்னாள் சட்டமா அதிபர் சஞ்சய ராஜரத்தினம் எனக்காக முன்னிலையானார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 17ஆவது பிரிவை திருத்தி, நீதிமன்றத்துக்கு இருந்த பிணை வழங்கும் அதிகாரத்தை நிறைவேற்று அதிகாரத்தின் ஒரு பகுதிக்கு வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் உயர் நீதிமன்றம் துணிச்சலான தீர்ப்பை வழங்கியது. அந்தப் பிரிவை திருத்துவதன் மூலம் நீதிமன்றத்தின் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்துக்கு வழங்கப்படுமாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மட்டும் போதாது என்றும், கட்டாயமாக மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. இதன்மூலம் உயர் நீதிமன்றத்தின் சுதந்திரமும் பாரபட்சமற்ற தன்மையும் மீண்டும் வெளிப்பட்டுள்ளன.
அதேவேளை, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் மீது பாயும் சட்டம்
அதில் பயங்கரவாதி என்பதற்கான வரைவிலக்கணம் மாற்றப்பட்டுள்ளது. அரசாங்கத்துக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுதல் அல்லது அரசாங்கத்துக்கு எதிரான சில விடயங்களை ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்தல் போன்ற செயற்பாடுகளும் பயங்கரவாத நடவடிக்கைகளாக கருதப்படும் வகையில் புதிய சட்டம் அமைந்துள்ளது.

இதனால் பொதுமக்கள், சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் அரசாங்கத்துக்கு எதிராக செயற்பட்டால் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படும் நிலை உருவாகலாம். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை நீக்கியதாக சர்வதேசத்துக்கு காண்பித்துக்கொண்டே, அதனை விட ஆபத்தான சில அம்சங்களைக் கொண்ட புதிய சட்டத்தை கொண்டு வருவதன் மூலம் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் முயற்சி இடம்பெறுகிறது.
22ஆவது அரசியலமைப்பு
ஒருபுறம் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரம் நீதித்துறையின் மீது செல்வாக்கை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும், மறுபுறம் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் ஊடாக அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுவோரை பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்துவதற்கான சூழல் உருவாக்கப்படுகின்றது.
மேலும், 22ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று கூறி விடயம் முடிவடைந்துவிட்டதாக கருதக்கூடாது. அதன் நடைமுறை விளைவுகள் அடுத்த வாரம் முதல் தெளிவாக தெரியவரும்.

நீதித்துறையின் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், எதிர்ப்புத் தெரிவிக்கும் உரிமை மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டிய முக்கிய விடயங்கள்.
இந்த விடயங்கள் அனைத்தும் சட்டங்களில் எழுதப்பட்டுள்ளபோது மட்டும் அவற்றின் முழுமையான தாக்கத்தை புரிந்துகொள்ள முடியாது. அவை நடைமுறைக்கு வந்த பின்னரே அதன் தாக்கம் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை அறிய முடியும்.
எனவே, எதிர்வரும் காலத்தில் அரசியலமைப்புச் சட்ட மாற்றங்கள் மற்றும் புதிய சட்டங்களின் நடைமுறைப்படுத்தல்கள் குறித்து மக்கள் மிகுந்த கவனத்துடன் அவதானிக்க வேண்டும் என்றார்.