கோட்டாபய, ரணில், விஜயதாச சந்திப்பு! 21வது வரைவில் தீர்க்கப்படாமலிருக்கும் முக்கிய பிரச்சினைகள்
21வது திருத்தச் சட்டத்தின் இறுதி வரைவில், ஜனாதிபதியின் அதிகாரங்கள் தொடர்பான மூன்று முக்கிய பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச ஆகியோர் நேற்றிரவு சந்தித்து இந்த பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.
அத்துடன் பிரதமர், நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கு இடையில் இன்று இது தொடர்பில் தனித்தனியான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? பிரதமரை நீக்கும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதில் பிரதமருக்கு உள்ள அதிகாரங்கள் ஆகியவை முக்கிய பிரச்சினைகளே தீர்க்கப்படவேண்டியுள்ளன.
இலங்கைக்கு நிதி மற்றும் பிற உதவிகளை வழங்குவதற்கு முன் இராஜதந்திர சமூகம் மற்றும் நன்கொடை நிறுவனங்கள் அரசாங்கத்தின் ஸ்திரத்தன்மையில் ஆர்வமாக இருக்கும் நிலையிலேயே இந்த சந்திப்புக்கள் இடம்பெறுகின்றன.
முக்கிய பிரச்சினைகளுக்கு அப்பால், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்களைக் கட்டுப்படுத்தும் முன்மொழிவும் சர்ச்சைக்குரிய பிரச்சினையாக மாறியுள்ளது.
பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்து வருகின்றனர்.
எனினும், பொதுஜன பெரமுன உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி ஜனாதிபதியே இதற்கான தீர்வை காணவேண்டியுள்ளது.
இதேவேளை பிரதமரை பதவி நீக்கம் செய்வதற்கான ஜனாதிபதியின் அதிகாரத்தை நாடளுமன்றத்திற்கு மாற்றுவது தொடர்பில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளும் வரைவு முன்மொழிவுகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.





நிலாவிடம் வம்பிழுத்தவர்களை தரமான சம்பவம் செய்த குடும்பத்தினர்.. அய்யனார் துணை தெறிக்கும் எபிசோட் Cineulagam
