வரவு - செலவுத் திட்ட வாக்கெடுப்பிலிருந்து விலகிய தமிழரசுக்கட்சி.. ஜனாதிபதியுடன் முக்கிய சந்திப்பு
2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்குபற்றாது என்று அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், ''இன்றைய வாக்கெடுப்பில் எங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசு சார்பாகவும் இல்லை, அரசுக்கு எதிராகவும் இல்லை, வாக்கெடுப்பில் இருந்து விலகுகின்கிறோம்.
நடுநிலை வகிப்பதன் மூலம் ஜனாதிபதி மீதான எங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தி, தீர்வுக்கான நல்லெண்ணத்தை ஒரு செய்தியாக விடுக்கின்றோம்.
ஜனாதிபதியுடன் அடுத்த வாரம் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்யப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் தான் 2026 வரவு - செலவுத் திட்டத்தின் மீது வாக்களிப்பதைத் தவிர்த்துள்ளோம்.
ஜனாதிபதி மீது நம்பிக்கை
இது ஒரு நல்லெண்ண அடிப்படையிலான முடிவு. நாம் எமது கட்சி ஜனாதிபதியின் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாகத்தான் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி எங்கள் பிரச்சினைகளை தீர்க்க முன்வருவார்.

தமிழர் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயல்வார், எமது மக்களின் நீண்டகாலமாக எதிர்பார்க்கும் புதிய அரசமைப்பை கொண்டுவருவார், பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட சமூகத்தின் கருத்துக்களைக் கேட்பார், நிலப் பிரச்சினைகளில் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கையுடன்தான் ஏகமனதாகக் கட்சியால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாங்கள் எதிர்க்க வேண்டிய நான்கு ஆண்டுகள் இன்னும் எங்களுக்கு உள்ளது. அடுத்த ஓர் ஆண்டுக்குள் எந்த முன்னேற்றமும் இல்லையெனில், அடுத்த ஆண்டு எதிர்ப்புத் தெரிவிக்கத் தயாராக இருக்கின்றோம்.
தமிழரசுக் கட்சி இன்று வாக்கெடுப்பில் இருந்து விலகியிருப்பது நாம் அரசுடன் செயற்படத் தொடர்ந்து தயாராகவுள்ளோம் என்பதைக் காட்டும் ஒரு முக்கியமான செய்தியாகும். அத்துடன் எனது தகப்பனாரின் இறுதி அஞ்சலியில் பங்குபற்றிய மற்றும் துக்கம் விசாரித்த அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |