இலங்கை தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள தகவல்
2024 வரவு செலவுத்திட்டத்துடன் பல துணை ஆவணங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, சர்வதேச நாணய நிதிய திட்டத்தில், இலங்கையின் தற்போதைய வெளிப்படைத்தன்மை கடந்த நவம்பர் மாதம் மேம்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக வெளியிடப்பட்ட வெரைட்டின் (Verite Research) ஆய்வில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 'தெரியாதது' என வகைப்படுத்தப்பட்ட ஆறு அர்ப்பணிப்புக்களின் முன்னேற்றம் குறித்த தகவல்களை துணை ஆவணங்கள் வழங்கியுள்ளன.
வரி வருவாய் இலக்கு
இதில் ஐந்து வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 6 ஆவது பொறுப்பான வரி வருவாய் இலக்கு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்று ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.
2024 நவம்பர் இறுதிக்குள் நிறைவேற்ற வேண்டிய 73 அர்ப்பணிப்புக்களில் 12 'நிறைவேற்றப்படவில்லை, 15 'தெரியாதவை' மற்றும் 46 நிறைவேற்றப்பட்டுள்ளது என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி அர்ப்பணிப்புக்களில் 63 சதவீதமானவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. எனினும் இந்த வகைப்படுத்தல், இலங்கையின் ஒட்டுமொத்த செயல்திறன் ஈர்க்கக்கூடியதை விட குறைவாகவே உள்ளது என்பதையே காட்டுவதாக ஆய்வில் தெரிவித்துள்ளது.
இதேவேளை சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் இரண்டாம் தவணையான சுமார் 330 மில்லியன் டொலர்களை வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் 12ஆம் திகதி வாக்களிக்கவுள்ளது.
