2024 ஜனாதிபதி தேர்தலும் விளைவுகளும்
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் ஆண்டு என்பது நிச்சயிக்கப்பட்டு நகர்ந்துகொண்டு இருக்கின்றது.
இதன் அரசியல் விளைவுகளை மாத்திரம் நோக்கும்போது நடப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு அபேட்சகராக இருக்கப்போகின்றார்.
மறு புறத்தில் அனுரகுமார திசாநாயக்க தேசிய மக்கள் சக்தியிலும், சஜித் பிரேமதாச ஐக்கிய மக்கள் சக்தியிலும் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், நான்கு வேட்பாளர்கள் தயாராக உள்ள நிலையில் தம்மிக்க பெரேராவும் அதில் அடங்குகின்றார் என தொக்குவைத்த செய்தியை சாகர காரியவசம் பொதுஜன பெரமுன சார்பில் வெளியிட்டுக்கொண்டு இருக்கும் சூழலில் ஒரு தமிழ் பொது வேட்பாளரும் அவசியம் என வடக்கு கிழக்கு தமிழ்கட்சிகள் ஒரு இராஜதந்திர நடவடிக்கை மேற்கொள்வதாக தமக்கு தாமே கூறிக்கொண்டு அறிக்கை வெளியிட்டுவருகின்றார்கள்.
தம்மிக்க பெரேரா
பொதுஜன பெரமுனவின் நால்வரில் அடங்கும் இலங்கையின் முதல்தர வியாபாரியும் 220 நிறுவனக் குழுமத் தலைவராகவும் 60000 வேலையாட்களுக்கு வேலைவழங்கும் தரமுடையவராகவும் தம்மிக்க பெரேரா திகழ்கின்றார்.
அவரது எதிர்பார்ப்பு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என்றும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பிரச்சினை மாத்திரம் இருப்பதாகவும் தன்னிடம் மட்டுமே தீர்வு இருப்பதாகவும் தரவுகளுடன் பிரித்துவாங்கி அறிக்கைவெளியிட்டுவருவதுடன் பொதுஜன பெரமுனவிற்கு 30சதவீத மக்களது வாக்குகளை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என்று தனது ஆய்வுக்குழுவின் அறிக்கையையும் வெளியிட்டுவருகின்றார்.
இவருடை அறிக்கை ஏனைய கட்சி வேட்பாளர்களை பயமுறுத்துகின்றதோ இல்லையே தனது கட்சியில் தன்னைவிட தேர்தலில் போட்டியிட விரும்பும் பெயர் வெளியிடப்படாத ஏனைய 03 வேட்பாளர்களையும் பயமுறுத்துவதாகவே அவதானிக்கவேண்டியுள்ளது.
இதனையும் தாண்டி இவர் நாடாளுமன்ற உறுப்பினராகி அமைச்சு பதவியேற்று 16 நாட்கள் அமைச்சராக (10 வேலைநாட்கள் மட்டும்) அமைச்சராக பதவிவகித்துள்ளார்.
இந்நிலையில், சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக நாடாளுமன்றத்தில் பதவிவகிக்கின்றார். ஆனால் அண்மைய நாட்களில் அனைத்து மேடைகளிலும் தேசிய மக்கள் சக்தியையும் அனுரகுமார திசாநாயக்கவையும் கடுமையாக விமர்சிக்கின்றார்.
இருதரப்பும் நடப்பு அரசியல்
மேலும் ஒருபடி அவரது கட்சி உறுப்பினர் சுஜீவ சேனசிங்க மிமிக்கிரி செய்தே சிறப்பிக்கின்றார். மறுபுறத்தில் அனுரகுமார திசாநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியையே விமர்சிக்கின்றார். இருதரப்பும் நடப்பு அரசினை விமர்சிப்பதை ஒப்பீட்டளவில் குறைவாகவே மேற்கொள்கின்றன.
இவ்விருவரது நிலைப்பாட்டையும் தெளிவாக பார்க்கையில் எதிர்க்கட்சித் தலைவருக்கான போட்டியே அன்றி ஜனாதிபதிக்கான போட்டி அல்ல என்பது மிகவும் தெளிவாகின்றது.
நடைமுறைச் சூழலைத் தாண்டி கொள்கை ரீதியான வேறுபாட்டுடன் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் அமைதல் வேண்டும். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மட்டுமே நாடு முன்னேற முடியும்.
மாறாக ஒரு நிலைப்பாடுடைய கட்சிகளே ஆளும் மற்றும் எதிர் கட்சிகளாக இருப்பின் அந்த நாட்டின் அமைப்பு தவறானது. காரணம் அங்கே ஒரே நிலைப்பாடுடைய கட்சிகளில் தனிமனித செல்வாக்குக்கள் முன்னிலைப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தப்படுகின்றது. ஊழல்கள் நிறைவாகவும் கட்சித்தாவல்கள் தாராளமாகவும் இருக்கும்.
இங்கே ஒரு நிறைவான செய்முறையை தனிமனித விருப்புக்களை தாண்டி மக்களுக்காக நிறைவேற்றுவது மிகவும் கடினமானது. இவ்வகையானவற்றை ஒரு ஆரோக்கியமான முன்னேற்றத்திற்குரிய நாட்டிற்குரிய பண்புகளாக அடையாளம் காணமுடியாது. எவ்வாறு இருப்பினும் தேசிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாவது நாட்டிற்கு சிறப்பானது.
நடப்பு ஜனாதிபதி தற்சமயம் ஐக்கிய தேசிய கட்சியை ஒரு முனையில் தேர்தலுக்கு உத்தியோகபூர்வமாக தயார்ப்படுத்திக்கொண்டு மறுபுறத்தில் கட்சிகளின் ஒங்கிணைவுக்கு மிகவும் சிறப்பாக களச்சூழலை உருவாக்கி வழங்கி வருகின்றார். சிங்கள மக்கள் தங்களது தேசிய வாக்குகளை வழங்குவதை கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் வெறுத்துவிட்டார்கள்.
இனியும் எந்தவொரு இனவாத சக்திக்கும் வாக்களித்து தங்களது சோற்றுக்கு மீண்டும் கையேந்த தயாராகவில்லை என்ற செய்தியை ராஜபக்ச குடும்பம் நம்புகின்றதோ இல்லையே சிங்கள மக்கள் நம்புகின்றார்கள்.
கட்சிகளை தன்வசப்படுத்திய ரணில்
பீரிஸ் தலைமையிலான வெளியேற்ற அணியின் ஒரு பகுதியினர், பொதுஜன பெரமுனவில் நாமல் ராஜபக்சவின் அணி, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில அணியினர் தவிர ஏனைய சிங்கள பிரபல அரசியல் கட்சிகள் மற்றும் தளங்களை ரணில் விக்கிரமசிங்க தன்வசப்படுத்தியுள்ளார்.
இங்கே மேலும் மக்கள் செல்வாக்குடைய முஸ்லீம் கட்சிகளும் முஸ்லீம் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை அறிந்து அதன்பாலே தமது தீர்மானத்தினை மேற்கொள்வார்கள். புதியதொரு நெருக்கடியை தமிழ்க் கட்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்த கட்சிகள் மாத்திரமே சந்திக்கஇருக்கின்றன. இவர்கள் முன்னால் மூன்று தெரிவுகள் இருக்கின்றன.
01. ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க சொல்வது
02. ஒரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது
03. எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காது இருப்பது
இதில் முதலாவதான தேர்தல் புறக்கணிப்பு என்பது ஒரு அரசியல் கையேலாத்தனத்தின் வெளிப்பாடாகவே கருதப்படும். காரணம் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க சொல்வது நடைமுறைக்கு சாத்தியமற்றது.
தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று தமிழ் மக்கள் மத்தியில் தமக்கு பலம் இருக்கும் என கருதிக்கொண்டு இத்தெரிவினை தமிழ் கட்சிகள் மேற்கொள்வார்களாயின் சிங்களத் தேசியக் கட்சிகளின் வளர்ச்சியை வடக்கு கிழக்கில் வளரவைப்பதற்கு மிகச் சிறந்த சந்தர்ப்பமாக அமையும்.
ஏனெனில் இன்றைய தமிழ் கட்சிகளின் உத்தரவுகளை மீறி தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள். மக்கள் தேர்தலை புறக்கணிக்க மாட்டார்கள்.
அவ்வாறு வாக்களிக்கும்போது அதனை சிங்களத் தேசிய கட்சிகளின் தமிழ் பிரதிநிதிகள் மிகவும் சிறப்பாக தங்களை கட்சிக்குள் வளப்படுத்த பெரிதும் உதவுவதாக இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பம் சிறீலங்கா சுதந்திர கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினராக நேரடியாக வென்ற அங்கஜன் இராமநாதனுக்கு மைத்திரீபால சிறீசேன காலத்தில் வழங்கப்பட்ட முக்கியத்துவம் இன்றும் நீடித்து வளர்கின்றது.
ரணிலுக்கான ஜனாதிபதி தேர்தல்
ஒரு ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது என்ற இரண்டாவது தெரிவானது சாத்தியமற்றது. இவ்வாறானதொரு நிலை தோன்றுமிடத்து இன்றைய தமிழ் கட்சிகளின் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் அடுத்த தேர்தலில் தங்களது நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தினை வெல்லது மிகவும் கடினமானதாக இருக்கும்.
மிகத் தெளிவாக, பெரும்பாலான வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளில் பிரபலமான கட்சிகளின் தீர்மானம் மிக்க சக்திகள் வடக்கிலேயே போட்டியிடுவார்கள்.
குறிப்பாக யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்திலேயே போட்டியிடுவார்கள். இம் முறை நாடாளுமன்றத் தேர்தலில் 03 ஆசனங்களை தமிழ் தேசிய கட்சிகள் யாழ்ப்பாணத் தேர்தல் மாட்டத்தில் வெல்வது என்பது மிகவும் கடினமான காரியம்.
காரணம் அவர்களுக்குள் உள்ள உட்கட்சிப் பிரிவினைகள். குறிப்பாக இவர்கள் ஒரு சின்னத்தில் தோன்றினாலும் வெற்றிக்கான வியூகங்கள் நிச்சயமாக தனித்தனியேதான் வடிவமைக்கப்படும்.
காரணம் இதில் யாருக்கும் வெற்றிக்கான நம்பிக்கை இல்லை. தேர்தலைத் தவிர வேறு எந்த தேவைக்காகவும் இக் கூட்டமைப்பினை பாவிக்கும் இதய சுத்தி எந்தவொரு அரசியல்வாதியிடமும் இல்லை.
எந்தவொரு கருத்தையும் தெரிவிக்காது இருப்பது என்பது சாமர்த்தியமானதொரு விடயமாகும். ஆனால் அரசியல் மேடைகள் தமிழ்த் தலைவர்களாது சாதுரியத்தினை நாற்றமெடுக்கவைப்பதற்காக கிளறும்.
அச்சந்தர்ப்பங்ளை தெளிவாக கையாளும் பக்குவம் இன்றைய தமிழ் தலைவர்களிடம் இல்லை. குறைந்தபட்சம் தமிழரசு கட்சியின் உட்கட்சி விவகாரங்களே மாதக் கணக்கில் நீடிக்கும்போது எப்படியொரு இணைந்த தீர்மானத்தில் மௌனம் காத்திட முடியும்.
தமிழ் கட்சிகளில் கூட்டமைப்பில் பிரதான இடத்தினை வெற்றிரீதியில் கத்தவைத்திருக்கும் தமிழரசு கட்சியின் முடிவு முக்கியமானதாக இருக்கும் என்ற எடுகோளில், இவர்களது தீர்மானங்கள் புஸ்வாணங்களாகவேமாறும் அல்லது உட்கட்சி ஜனநாயகங்களால் மாற்றப்படும்.
முடிவாக இது ரணில் விக்ரமசிங்கவிற்கு மட்டுமான ஜனாதிபதி தேர்தல், சஜித் பிரேமதாசவிற்கும் அனுரகுமார திசாநாயக்கவிற்கும் எதிர்க்கட்சி தலைவருக்கான தேர்தல், தமிழ் கட்சிகளில் ஆசனத்தினை இழக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இனங்காண்பதற்கான தேர்தல் என்பது மாத்திரமே யதார்த்தமாகப் போகின்றது.
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Nada. Jathu அவரால் எழுதப்பட்டு, 15 February, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. |