உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பிரதான சூத்திரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை : இராதாகிருஷ்ணன் (Video)
"உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் இத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னமும் நீதி நிவாரணம் கிடைக்கவில்லை என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான இராதாகிருஷ்ணன் (Velusami Radhakrishnan ) தெரிவித்துள்ளார்.
ஹட்டன் நோர்ட்டன் பிரிட்ஜ்யில் அமைந்துள்ள 'துதியின் தோட்டம்' தேவாலய நிர்வாகத்தால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட வருடத்தின் இறுதி நாள் ஒன்று கூடலுக்கு சிறப்பு அதிதியாக வேலுசாமி இராதாகிருஸ்ணன் கலந்துக்கொண்டு கலந்துரையாடலில் ஈடுப்பட்டுள்ளார்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
" 2021 ஆம் ஆண்டு முடிவடைந்துள்ளது. அதிகளவு துன்பங்களை வழங்கிய ஆண்டாக அது அமைந்துவிட்டது. கோவிட் ஆக்கிரமிப்பால் பொருளாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டது. எல்லாவற்றுக்கும் மக்கள் வரிசையில் காத்திக்க வேண்டிய பேரவலமும் ஏற்பட்டது. எனவே, மலர்ந்துள்ள புத்தாண்டாவது சுபீட்சமாக அமையவேண்டுமென பிரார்த்திப்போம்.
அதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவமானது இந்த நாட்டையே உலுக்கியது. அத்தாக்குதல் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் உறவுகளை இழந்தவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. சூத்திரதாரி யார் என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்கான விசாரணைகளை துரிதப்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இந்த விடயத்தில் பக்கச்சார்பற்ற விசாரணையை எதிர்ப்பார்க்கின்றோம்.
யுகதனவி விவகாரத்தில் இந்த அரசு முறையற்ற விதத்திலும், வெளிப்படைதன்மை இன்றியுமே செயற்படுகின்றது. உரிய முகாமைத்துவம் இல்லை. அதனால்தான் பணவீக்கம் கூட அதிகரித்துவருகின்றது எனவும் இதன்போது கருத்து தெரிவித்துள்ளார்.