போர் மண்டலமாக ஹோர்முஸ் - எங்களை காப்பாற்றுங்கள்..! பீதியில் கதறும் 20,000 மாலுமிகள்
மத்திய கிழக்கு போர் ஐந்தாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் அச்சுறுத்தல்களால் ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளது.
இதனால் சுமார் 2,000 கப்பல்களில் சிக்கியுள்ள 20,000 மாலுமிகளின் நிலை இன்று கேள்விக்குறியாகி உள்ளது.
உணவு மற்றும் குடிநீர் தீர்ந்து வரும் நிலையில், சர்வதேச கடல்சார் சட்டங்களின் சிக்கல்களால் அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் (ITF) ஆதரவுக் குழுவிற்கு வரும் செய்திகளில் சில, "மாலுமிகள் உயிர்வாழ உணவு, குடிநீர் மற்றும் அடிப்படைத் தேவைகளை உடனடியாக வழங்கவும்.
குவியும் அழைப்புக்கள்..
ஐயா, இங்கே குண்டுவெடிப்புகள் நடக்கின்றன. நாங்கள் சாக விரும்பவில்லை. தயவுசெய்து எங்களை இங்கிருந்து காப்பாற்றுங்கள்" என நள்ளிரவு நேரங்களில் இணைய வசதி கிடைக்கும் போதெல்லாம் மாலுமிகள் கதறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில், "இது ஒரு அசாதாரணமான சூழல். மாலுமிகள் மத்தியில் பெரும் பீதி நிலவுகிறது" என சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பின் அரபு நாடுகள் மற்றும் ஈரானுக்கான ஒருங்கிணைப்பாளர் முகமது அராச்செடி குறிப்பிட்டுள்ளார்.
போர் தொடங்கிய பிறகு, ஹோர்முஸ் நீரிணைப் பகுதி 'போர் மண்டலமாக' (War Zone) அறிவிக்கப்பட்டது. விதிமுறைகளின்படி, இப்பகுதியில் பணியாற்றும் மாலுமிகளுக்கு, நிறுவனத்தின் செலவில் தாய்நாட்டிற்குத் திரும்பும் உரிமை உண்டு.
பணியாற்றும் நாட்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால், பல மாலுமிகள் இத்தகைய ஒப்பந்தங்கள் இல்லாத கப்பல்களில் பணிபுரிகின்றனர்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
மார்ச் 18ஆம் திகதியிட்ட ஒரு மின்னஞ்சலில், ஒரு மாலுமி, "எங்கள் பாதுகாப்பை முன்னிறுத்தி நாங்கள் வெளியேற விரும்பினாலும், கப்பல் நிறுவனங்கள் எங்களைக் கட்டாயப்படுத்தி ஆபத்தான பகுதிகளில் வேலை வாங்குகின்றன. எங்களுக்கு வேறு வழியே இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.

ITF குழுவிற்கு வரும் மின்னஞ்சல்களில் 50 வீதம் சம்பளம் தொடர்பானவை. பலர் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும், வறுமை காரணமாக கப்பலை விட்டு வெளியேற மறுக்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நாளைக்கு 16 டொலர்கள் சம்பளத்திற்கு பணி செய்யும் மாலுமிகள், போர் மண்டல விதிமுறைப்படி அது 32 டொலராக உயருமா என்று ஏக்கத்துடன் கேட்பதாக ITF குழு தெரிவிக்கின்றது.
நவீன கப்பல் போக்குவரத்துத் துறை மிகவும் சிக்கலானது. ஒரு கப்பல் ஒரு நாட்டில் உரிமையாளரைக் கொண்டிருக்கலாம், மற்றொரு நாட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் (Flag), மூன்றாவது நாட்டினால் நிர்வகிக்கப்படலாம்.
மாலுமிகளின் அவலநிலை
சாதாரண காலத்தில் இது வணிகத்திற்கு எளிதாக இருந்தாலும், போர் போன்ற நெருக்கடி நேரங்களில் மாலுமிகளின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இந்த 'நிர்வாகச் சிக்கல்' காரணமாகவே ஆயிரக்கணக்கானோர் நடுக்கடலில் தவித்து வருகின்றன நிலையில், போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 19 கப்பல் சார் விபத்துகள் உறுதி செய்யப்பட்டுள்ளன; 10 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர்.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதால், இந்தியா மற்றும் சீனா போன்ற ஆசிய சந்தைகளில் எரிசக்தி பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது.
இந்த முற்றுகையினால் உலகளவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து (Inflation) வருகிறது. ஈரான் மற்றும் இஸ்ரேல் மீதான தாக்குதல்களைத் தொடங்கிய அமெரிக்காவிற்கு, இந்த முற்றுகையை உடைக்க சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்து வருகின்றது.