சலேவை பார்த்து சிறைக்கு செல்ல ஆசைப்படும் ஆளும் கட்சி உறுப்பினர்
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவிற்கு சிறைச்சாலையில் வழங்கப்படும் சலுகைகளை பார்க்கும் போது சிறைக்குச் செல்ல வேண்டுமென ஆசைப்படுவதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்காக அரசாங்கம் முன்னெடுத்து வரும் முறையான விசாரணை செயல்முறையை சீர்குலைக்க எதிர்க்கட்சியின் சில அரசியல் குழுக்கள் முயற்சித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விசேடமாக, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி சுரேஷ் சலே குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணை செயல்முறையை சீர்குலைக்கும் நோக்கில் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர மற்றும் ராஜபக்சவினர் உள்ளிட்ட குழுவினர் செயற்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் இங்கு தெரிவித்தார்.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு சிறைச்சாலைக்குள் அதிகபட்ச வசதிகளும் மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தியிருந்ததை ஜகத் மனுவர்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறையில் இருக்கும் போது அதிக தடவைகள் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நபர் அவராகவே இருக்கக்கூடும் எனவும், தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் விழுந்த பற்களைக் கூட பொருத்திக் கொடுப்பதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான வழக்கைப் பார்த்தால், அது இலங்கையில் 278 பேரைக் கொன்ற மற்றும் 500 க்கும் மேற்பட்டோரை நிரந்தரமாக ஊனமாக்கிய ஒரு குண்டுவெடிப்பு ஆகும். அப்படியிருக்கையில், இது குறித்து மக்கள் நீதி கேட்பதில் என்ன தவறு இருக்கிறது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் இதில் நீதியைப் பெற்றுக்கொடுக்க நாங்கள் தலையிடுவதில் என்ன தவறு? நாங்கள் நிச்சயமாகச் செய்ய வேண்டிய ஒரு காரியம் இது. ஏனென்றால், இந்தக் கொலையாளியைக் கண்டுபிடிப்போம் என்று கூறித்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். இந்த ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதாக நாங்கள் வாக்குறுதி அளித்துள்ளோம் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, அது தொடர்பான விசாரணைகள் ஒரு முறையான வழிமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் போது, நீதிமன்றம் அதில் மிகச் சிறப்பாக செயல்படும் போது, பொலிஸாரும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் எந்தவொரு சார்புமின்றி இதில் செயல்படும் போது இதனைச் சீர்குலைக்க முயற்சிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியை சீர்குலைபப்தற்கு ஒரு குழுவினர் வெளியில் இருக்கிறார்கள் எனவும் அவர்கள்தான் விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, சரத் வீரசேகர மற்றும் ராஜபக்சவினர் எனவும் தெரிவித்துள்ளார்.
விசேடமாக சுரேஷ் சலே போன்ற ஒருவரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், சுரேஷ் சலே போன்ற ஒருவரை எங்களிடமிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியமில்லை. அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் அவரைப் பாதுகாக்கிறோம். அரசாங்கம், நீதிமன்றம், பொலிஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆகிய அனைவரும் சுரேஷ் சலேயின் பாதுகாப்பிற்காகவே இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
அவரை ராஜபக்ஷவினரிடமிருந்தே பாதுகாக்க வேண்டும். அவரை உதய கம்மன்பிலவிடமிருந்து பாதுகாக்க வேண்டும். அவரை விமல் வீரவங்சவிடமிருந்து பாதுகாக்க வேண்டும். ஏனென்றால் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பது அவர்களிடமிருந்தேயாகும் என ஜகத் மனுவர்ன தெரிவித்துள்ளார்.
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri