9/11 தாக்குதலின் 20 ஆண்டுகள்: இதனால் உலக அரசியலில் உண்டான அதிர்வலைகளும் மாற்றங்களும் என்னென்ன?
2001 செப்டம்பர் 11 என்பதை எல்லா நாளையும் போல மற்றொரு நாளாகக் கருத முடியாது. அன்றிலிருந்து உலகில் ஒரு புதிய யுகம் தொடங்கியது. பூமிப்பந்தின் எந்த மூலையிலும் இருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கான லைசென்ஸை அமெரிக்கா எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெற்றுக்கொண்டது.
இருபது லட்சம் ஆண்டுகளைக் கடந்த மனித இனம் வெறும் 20 ஆண்டுகளில் தலைகீழாக மாறிவிடும் என்று சொன்னால் நம்புவதற்கு அதிர்ச்சியாக இருக்கும்.
2001 செப்டம்பர் 11 அமெரிக்க உலக வர்த்தக மையத் தாக்குதலுக்குப் பிறகு உலகம் நிஜமாகவே தலைகீழாகி இருக்கிறது.
அன்று காலை 8.45 மணிக்கு அல் கொய்தா தீவிரவாதி முகமது அட்டா ஓர் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை உலக வர்த்தக மைய கோபுரத்தில் மோதி நொறுங்கிவிழச் செய்த நிமிடத்திலிருந்து, உலகத்தின் மாண்புகளும் நொறுங்கிவிழ ஆரம்பித்தன.
2,983 பேரை பலிகொண்ட அந்தத் தாக்குதலால் அமெரிக்கா நிலைகுலைந்தது. 'தீவிரவாதத்துக்கு எதிரான போர்' என அந்த தேசம் எடுத்த நடவடிக்கைகள் பலவும் உலகையே நிலைகுலையச் செய்தது நிஜம். அந்தத் தாக்குதலின் 20ம் ஆண்டு நினைவு தினத்தில், உலகம் மீண்டும் தீவிரவாதம் பற்றிப் பேசுகிறது.
ஆப்கானிஸ்தானை முன்பைவிட மோசமான தேசமாக மாற்றிவிட்டு அமெரிக்கா அங்கிருந்து வெளியேறி இருக்கிறது. 2001 செப்டம்பர் 11 என்பதை எல்லா நாளையும் போல மற்றொரு நாளாகக் கருத முடியாது. அன்றிலிருந்து உலகில் ஒரு புதிய யுகம் தொடங்கியது.
பூமிப்பந்தின் எந்த மூலையிலும் இருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாடுவதற்கான லைசென்ஸை அமெரிக்கா எந்த எதிர்ப்பும் இல்லாமல் பெற்றுக்கொண்டது. ஆப்கானிஸ்தானில் இறங்கி தாலிபன் அரசை வீழ்த்தியதுடன் அது முடியவில்லை.
'பேரழிவு ஆயுதங்களை ஈராக் வைத்திருக்கிறது' என்று குற்றம் சாட்டி, அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. ஈராக்கை ஆட்சி செய்துவந்த சதாம் உசேனை சிறை பிடித்தது. அவர் மீது ஒரு விசாரணை நடத்தி மரண தண்டனை விதித்தது. அதன் தொடர்ச்சியாக அரபு வசந்தம் என்ற பெயரில் பல நாடுகளில் அரசுகளுக்கு எதிராக நிகழ்ந்த மக்கள் போராட்டங்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஊக்கமும் உதவியும் கொடுத்தன.
டுனீஷியா நாட்டில் ஒரு சின்ன தீப்பொறியாகக் கிளம்பி லிபியா, எகிப்து, ஏமன், சிரியா என்று பல நாடுகளிலும் இந்தக் கிளர்ச்சி பரவியது. வளைகுடா நாடுகளிலும், வட ஆப்பிரிக்க நாடுகளிலும் இதனால் மக்கள் அமைதியிழந்தனர். டுனீஷியா, எகிப்து போன்ற ஜனநாயகப் பக்குவமுள்ள நாடுகள் இதில் பிழைத்துக்கொண்டன.
மற்ற நாடுகளின் நிலை சோகம். 9/11 தாக்குதலுக்குப் பிறகு இஸ்லாமிய தேசங்களில் நிலவிய அமைதியின்மை, பலரையும் அகதிகளாக தங்கள் தாய்மண்ணிலிருந்து வெளியேற்றியது. அவர்களை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தயக்கம் காட்டின.
அகதிகளையும் தீவிரவாதிகளையும் வித்தியாசப்படுத்திப் பார்க்க அந்த தேசங்கள் தயாராக இல்லை.
சிரியாவிலிருந்து கூட்டம் கூட்டமாக இரவு நேரத்தில் படகுகளில் ஏறி இத்தாலி கரையை அடைவதற்கு மக்கள் பரிதவித்தார்கள். அப்படி ஒரு பயணத்தில் படகு மூழ்கி, அய்லான் குர்தி என்ற மூன்று வயது சிறுவன் இறந்து கரை ஒதுங்கிய புகைப்படம், உலகின் மனசாட்சியை உலுக்கியது.
தீவிரவாதமும், அதற்கு எதிரான போரும் எப்படி அப்பாவிகளின் வாழ்வைக் கலைத்துப் போடுகிறது என்பதற்கான சாட்சியம் அது. இன்று உலகிலேயே அதிக மக்கள் அகதி முகாம்களில் வாழும் பகுதியாக மத்தியக் கிழக்கு தேசங்கள் மாறியிருக்கின்றன.
போர்க்களமான தங்கள் நாடுகளிலிருந்து துருக்கி, எகிப்து, ஈரான், லெபனான் என்று பல நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் அகதி முகாம்களில் வந்து வசிக்கிறார்கள். தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா தொடங்கிய போர், அதிகாரப்பூர்வமாக ஆப்கானிஸ்தானில் முடிந்துவிட்டது.
ஆனால், ஈராக், சிரியா, ஏமன் என்று பல நாடுகளில் யாரும் இன்னமும் ஆயுதங்களைக் கீழே போடவில்லை. ஆனால், அது இன்னும் பல தீவிரவாதக் குழுக்கள் உருவாகவே காரணமானது. ஈராக்கையும் சிரியாவையும் அமெரிக்கா நிலைகுலையச் செய்தபிறகு அங்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு வளர்ந்து ஒரு பகுதியையே பிடிக்கும் அளவுக்கு வளர்ந்தது.
பிறகு அவர்களை வீழ்த்த அமெரிக்கா அங்கு போனது. அமெரிக்கா இங்கு வந்தபோது அல் கொய்தாவும் தாலிபன்களும் மட்டுமே அச்சுறுத்தலாக இருந்தார்கள். இப்போது பெரியதாகவும் சிறியதாகவும் ஏராளமான குழுக்கள் வந்துவிட்டன.
9/11 தாக்குதல் வேறுவிதமாகவும் உலகை மாற்றியது. தீவிரவாதத்துக்கும் விடுதலைப் போருக்கும் வித்தியாசம் தெரியாமல் போனது. நிஜமாகவே இன ஒடுக்குமுறைக்கு ஆளாகி தங்களுக்கான விடுதலைக்குப் போராடிய பல குழுக்களுக்கு அதுவரை கிடைத்துவந்த ஆதரவும் அனுதாபங்களும் காணாமல் போயின. ஆயுதம் ஏந்திய எல்லோரையும் ஆபத்தாகப் பார்த்து ஒடுக்கினார்கள்.
இதைச் செய்த சர்வாதிகார ஆட்சியாளர்கள் பலருக்கு மேற்கத்திய உலகின் உதவி தாராளமாகக் கிடைத்தது. இலங்கை அதற்கு ஓர் உதாரணம். 9/11 தாக்குதலுக்குப் பிறகு அமெரிக்காவின் ஒட்டுமொத்த கவனமும் இஸ்லாமிய தேசங்களின் பக்கம் திரும்பியது.
அவர்களின் வெளியுறவுக் கொள்கையே இந்த நாடுகளைச் சார்ந்ததாக மாறியது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி சீனா பல நாடுகளை வசீகரித்தது. ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, தெற்காசியா என எல்லா பிராந்தியங்களிலும் காலூன்றி ஒரு வல்லரசாக உயர்ந்தது.
அமெரிக்கா சற்றே சுதாரித்து திரும்பிப் பார்ப்பதற்குள் சீனா பெரிய சக்தியாக வளர்ந்துவிட்டிருந்தது. அமெரிக்காவும் ரஷ்யாவும் பனிப்போர் செய்த காலம் போய், இப்போது அமெரிக்காவும் சீனாவும் பனிப்போர் செய்யும் காலம் வந்துவிட்டது.
இதில் சீனாவின் கையே ஓங்கியிருப்பதில் அமெரிக்க அரசியல்வாதிகளுக்குத் தாளமுடியாத ஆதங்கம் எழுந்துள்ளது. 9/11 தாக்குதலுக்கு முன்பு பயணங்கள் இனிமையாக இருந்தன; ஓர் ஏழை நாட்டிலிருந்து கல்வி, வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக வளர்ந்த நாடுகளுக்குக் குடிபெயர்வது சுலபமாக இருந்தது.
சக மனிதர்களை அவர்களின் பெயரைப் பார்த்து, அடையாளங்களைப் பார்த்து, தோற்றத்தைப் பார்த்து, நிறத்தைப் பார்த்து சந்தேகம் கொள்ளும் உலகமாக இப்போது மாறியிருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அமெரிக்கா சென்றபோது விமான நிலையத்தில் அவரை உடைகள் மற்றும் ஷூக்களைக் கழற்றும்படி கட்டளை போட்டு சோதனை செய்தனர்.
இந்த விவகாரம் சர்ச்சையாகி அமெரிக்கா மன்னிப்பு கேட்டது. ஆனால், இன்றும் இந்த சோதனை நூற்றுக்கணக்கானவர்களுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. எவரையும் ஆபத்தான தீவிரவாதியாக பார்க்கும் இந்த மனநிலையை அந்தத் தாக்குதல்தான் உருவாக்கியது.
எல்லாவற்றுக்கும் மேலாக உலக அரசியலையும் அந்தத் தாக்குதலே உருமாற்றியது. இணக்கமான மேற்கத்திய தேசங்களில்கூட வெறுப்பு அரசியல் செய்யும் தலைவர்கள் உருவானார்கள். இந்த சமூக வலைதள உலகில் அவர்கள் தங்கள் பிரசாரங்களை இன வெறுப்பாகக் கட்டமைக்கிறார்கள்.
பட்டாம்பூச்சி விளைவு போல இது எங்கெங்கும் பரவுகிறது. அமெரிக்க கோயில் சுவர்களில், 'இந்தியர்களே திரும்பிப் போங்கள்' என்று வாசகம் எழுதுகிறவர்களையும், தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களைத் தாக்குபவர்களையும் இந்த வெறுப்பு பிரசாரமே இணைக்கிறது.