வெளிநாடொன்றில் கோர விபத்து : இரண்டு இலங்கையர்கள் பலி
தென் கொரியாவின் Gyeonggi மாகாணத்தில் உள்ள Hwaseong பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 2 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு 9.10 மணியளவில் Jangan-myeon பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த இருவரும் 30 வயதுடைய இளைஞர்கள் எனவும், அவர்கள் அப்பகுதியிலுள்ள தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய சக ஊழியர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இலங்கையர்கள் பலி
பணி முடிந்து தமது தங்குமிடத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்த போதே விபத்து ஏற்பட்டுள்ளது.

வீதியோரமாக நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது, 7.5 தொன் எடையுள்ள லொறியொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட மர வீடொன்றின் கூரைப் பகுதி, லொறியின் பின்பகுதியிலிருந்து வெளியே நீட்டிக்கொண்டிருந்தமையால் மோதியுள்ளது.
இருவரினதும் தலை மற்றும் வயிற்றுப் பகுதிகளில் இந்தக் கூரைப் பகுதி மோதியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த இலங்கையர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களின் உயிரைக் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது.
சாரதி கைது
விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி மீது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. 50 வயதுடைய நபருக்கு எதிராக, வீதி விபத்து தொடர்பான சட்டத்தின் கீழ் மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சாரதி மதுபானமோ அல்லது போதைப்பொருளோ பயன்படுத்தியிருக்கவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொருட்களை ஏற்றிச் செல்லும் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளனவா என்பது உட்பட விபத்திற்கான காரணங்கள் குறித்துப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.